தேவிஸ்ரீபிரசாத் இசை, மாணவிகள் தயாரித்த சாட்டிலைட்டுடன் விண்வெளி சென்ற SSLV D2! – சிறப்பான சில தகவல்கள்!

வெள்ளி, 10 பிப்ரவரி 2023 (11:17 IST)
இஸ்ரோவின் எஸ்.எஸ்.எல்.வி டி2 ராக்கெட் 3 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு சாட்டிலைட்டுகளை விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது. செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவ உலக நாடுகள் பல இஸ்ரோவின் உதவியை நாடும் வகையில் இஸ்ரோவின் வளர்ச்சி அமைந்துள்ளது.

SSLV என்றால் என்ன?

இந்நிலையில் சமீபமாக சிறிய ரக சாட்டிலைட்டுகளை குறைந்த பொருட்செலவில் விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் இஸ்ரோ ஈடுபட்டிருந்தது. அந்த வகையில் இஸ்ரோ தொடங்கிய புதிய திட்டம்தான் SSLV (Small Satellite Launching Vehicle). இந்த SSLV திட்டம் இஸ்ரோவின் முந்தைய பிஎஸ்எல்வி ராக்கெட்டை விட குறைந்த செலவில் சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை விண்ணில் எளிதாக ஏவ ஏற்படுத்தப்பட்டது.

இந்த SSLV D2 ராக்கெட் மூலமாக இன்று 3 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வெற்றிகரமாக ஏவப்பட்டுள்ளன.

பிரதான செயற்கைக்கோளான ஈஓஎஸ் – 07 (EOS 07) புவி கண்காணிப்பிற்காக அனுப்பப்படுகிறது. உடன் பயணிக்கும் செயற்கைக்கோள்களில் ஒன்றான ஜானுஸ் 1 (Janus – 1) ஒரு தொழில்நுட்ப மாதிரி சாட்டிலைட் ஆகும். இதை அமெரிக்காவை சேர்ந்த அண்டாரிஸ் நிறுவனம் இஸ்ரோ மூலமாக விண்ணில் ஏவுகிறது.

கடைசி சாட்டிலைட்டான ஆசாதி சாட் 2 (AzaadiSat2) இந்திய பள்ளி மாணவிகளால் உருவாக்கப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் இணைந்து உருவாக்கிய ஆசாதி சாட் 2 ஸ்பேஸ்கிட்ஸ் இந்தியாவின் இரண்டாவது சாட்டிலைட் ஆகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர்கள் இணைந்து உருவாக்கிய ஆசாதி சாட் முதல் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது.

மேலும் இந்த சாட்டிலைட் ஜி20 மாநாட்டை இந்தியா நடத்துவதற்கான லோகோவையும் தாங்கி சென்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேசிய மாணவர் படை (NCC – National Cadet Corps)-ன் 75வது ஆண்டை சிறப்பிக்கும் லோகோவும் அதில் இடம்பெற்றுள்ளது.

“ஸ்பேஸ் சாங்” எனப்படும் பெண் குழந்தைகள் மற்றும் மாணவர்களின் விண்வெளி கனவுகளை எடுத்துரைக்கும் தேவிஸ்ரீபிரசாத்தின் பாடலும் அதில் இடம்பெற்றுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்