சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து ஷிகோகாபாத்திற்கு தனது தாய் ஒருவருடன் 19வயது இளம்பெண்ணும் பயணித்துள்ளார். அப்போது அவரது செய்கைகளை கண்டு அவருக்கு கொரோனா இருப்பதாக சக பயணிகள் சந்தேகித்துள்ளனர். இதுகுறித்து பேருந்தின் நடத்துனர் மற்றும் ஓட்டுனரிடம் பயணிகள் புகார் அளித்துள்ளனர். இதனால் அவரை அவர்கள் வலுக்கட்டாயமாக பேருந்திற்கு வெளியே வீசியுள்ளனர். இந்த சம்பவத்தில் இளம்பெண் உயிரிழந்துள்ளார்.
அப்போதே இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் புகார் அளித்தும் காவல்நிலையத்தில் முதல்கட்ட தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை என கூறப்படுகிறது. மேலும் பிரேத பரிசோதனையிலும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இந்த சம்பவம் குறித்து விசாரணை வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மலிவால் உத்தர பிரதேச காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் தற்போது இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.