டீப்சீக் செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்: காங்கிரஸ் எம்பி கோரிக்கை..!

Siva

புதன், 12 மார்ச் 2025 (08:01 IST)
சீனாவை சேர்ந்த டீப்சீக் என்ற ஏஐ செயலி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சாட் ஜிபிடி உள்பட பல ஏஐ தொழில்நுட்பங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு, மிகப்பெரிய அளவில் பயனர்களின் மத்தியில் பிரபலமாகிவிட்டது என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில், அமெரிக்கா உள்பட சில நாடுகள் டீப்சீக் செயலியை அரசாங்க ஊழியர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளன. இதன் பின்னணியில், இந்தியாவிலும் தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி கோவால் கே. பத்ரி நேற்று மக்களவையில் கோரிக்கை விடுத்தார்.

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்பதை மறுத்து, டீப்சீக் பதில் அளித்ததாகவும், இதற்கு விளக்கம் கேட்டு சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
 
அதேபோல், திபெத் நாடு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி என டீப்சீக் தெரிவித்ததாகவும், பல்வேறு தவறான தகவல்களை தருவதால் இந்த செயலிக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஏற்கனவே, சாட் ஜிபிடி பயன்பாட்டை அரசு அலுவலகங்களில் உள்ள கணினிகளில் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவுறுத்தியது. இந்நிலையில், தற்போது காங்கிரஸ் எம்பியின் இந்த கோரிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்