விவசாயிகளை அழ வைக்கும் அழகிய சின்னஞ்சிறு பறவைகள் – என்ன நடக்கிறது?

செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (23:19 IST)
வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் குஜராத் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர் என்ற செய்தியை நாம் கேள்விப்பட்டுள்ளோம். அதேபோல, கென்யாவில் சிட்டுக் குருவியை போன்ற பறவை ஒன்று நெல் பயிரிடும் விவசாயிகளை ஆட்டிப் படைத்து வருகிறது.
 
கென்யாவின் மேற்கு பகுதியில் கிசுமு என்ற நகரில் க்விலியா என்ற சிவப்பு நிற அலகு கொண்ட சின்னஞ்சிறு பறவைகள் படையெடுத்து அறுவடையை கேள்விக்குறியாக்கியுள்ளது.
 
"இந்த பறவைகளை விரட்ட நான் கத்தி கத்தி எனது குரலை இழந்துவிட்டேன். நாள் முழுவதும் இவைகளை விரட்டுவதே பெரும் வேலையாக உள்ளது. எதை கொண்டும் இந்த பறவையை விரட்ட முடியவில்லை. இந்த பறவைகள் எதற்கும் அஞ்சவில்லை," என குசுமு பகுதியில் விவசாயம் செய்யும் ரோஸ் நேகேசா பிபிசியிடம் தெரிவிக்கிறார்.
 
இந்த பறவைகள் இல்லாத சமயத்தில் என்னால் தனியாக வேலை செய்ய முடியும். ஆனால் இப்போது குறைந்தது நான்கு பேர் வரை என்னோடு வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பணமும் அதிகம் செலவாகிறது. இந்த பயிர்கள் மட்டுமே எங்களது வாழ்வாதாரம்" என்கிறார் அவர்.
 
 
துருக்கி நிலநடுக்கம்: 2 நாட்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த சகோதரிகளை மீட்க நடந்த போராட்டம்
இந்த பறவைகளை விரட்ட, சோளக்காட்டு பொம்மை, ஒலி பெருக்கி, பறவை வலை என எதுவும் கை கொடுக்கவில்லை.
 
இவற்றை விரட்ட ஐந்து பேரை பணியமர்த்தியுள்ள தூலூ என்ற விவசாயி, இந்த பறவைகள் தனது நான்கு ஏக்கர் நிலத்தை அழித்துவிட்டதாக கூறுகிறார்.
 
"எனக்கு எந்த லாபமும் இல்லை. எவ்வாறு எனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவேன்?" என்கிறார் அவர்.
 
இந்த க்விலியா பறவைகள், கிழக்கு மற்றும் தென் ஆப்ரிக்கா முழுவதும் பரவியுள்ளது.
 
ஒரு பறவை சுமார் 10 கிராம் அளவிலான பயிரை உண்டாலும், சுமார் 20 லட்சம் பறவைகள் 24 மணி நேரத்தில் 20 டன் பயிரை உண்ணும் வலிமை கொண்டது.
 
2021ஆம் ஆண்டு குறிப்பாக ஆப்ரிக்க துணை கண்டத்தில் இந்த பறவைகளால் சுமார் 50 மில்லியன் டாலர் மதிப்புள்ள பயிர்கள் சேதமடைந்துள்ளதாக ஐநாவின் உணவு மற்றும் விவசாயத்திற்கான அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
 
 
கிசுமுவில் சுமார் 10 மில்லியன் பறவைகள் 300 ஏக்கர் நெற்பயிரை சேதமாக்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் மேலும் 2,000 ஏக்கர் நிலம் ஆபத்தில் உள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
நாட்டின் பிற பகுதிகளும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. தெற்கு நாரோக் கவுன்டியில் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 40 சதவீத கோதுமை பயிரை இந்த பறவைகள் சேதமாக்கியுள்ளன.
 
ஆப்ரிக்காவில் நிலவும் கடும் பஞ்சத்தால் காட்டுப்புல்லின் விதை குறைந்திருக்கலாம். அந்த புல்வகைதான் இந்த பறவைகளின் பிரதான உணவு. எனவே, அவை தற்போது பயிர்களைத் தேடி வருகின்றன என கென்ய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
 
ஆனால், 'நேச்சர் கென்யா' என்ற அமைப்பைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் பால் கசேரு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சி மட்டுமே இதற்கு காரணம் இல்லை என்கிறார்.
 
கடுமையான விவசாயம் மற்றும் அதிகரிக்கும் குடியிருப்புப் பகுதிகளால் இயற்கை தாவரங்கள் வளர வாய்ப்பில்லை. எனவே, அது தற்போதையை நிலைமைக்குத் தன்னை பழக்கப்படுத்தி கொள்கிறது என்கிறார் பால்.
 
மேலும், ஆப்ரிக்கா முழுவதும் தானிய வகைகளின் உற்பத்தி அதிகமானதும் பறவைகளின் எண்ணிக்கை உயர்வுக்கு காரணம் என்கின்றனர்.
 
அந்த தானிய வகைகள் இவற்றுக்கு உணவாக உள்ளது.
 
இதனூடே இந்த பறவை அதிவேகமாக இனப்பெருக்கம் செய்யும் என்பதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. அதாவது ஆண்டுக்கு மூன்று முறை ஒன்பது முட்டைகள் வரை இடும் தன்மை கொண்டது இந்த பறவைகள்.
 
பாரம்பரிய முறைகள் எதுவும் பறவைகளை விரட்டப் பலனளிக்காததால் ரசாயன தெளிப்பு முறையை அரசு அதிகாரிகள் கையில் எடுத்துள்ளனர்.
 
2019ஆம் ஆண்டு நாட்டின் அதிகப்படியான நெற்பயிர் வளர்க்கும் திட்டமான எம்வீ பாசன திட்டத்தை பாதித்த 80 லட்சம் பறவைகளை ரசாயன தெளிப்பின் மூலம் அதிகாரிகள் கொன்றனர்.
 
அதேபோல, கடந்த ஆண்டும் 20 லட்சம் பறவைகள் கொல்லப்பட்டன.
 
இந்த வருடம் குறைந்தது 60 லட்சம் பறவைகளை கொல்ல அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்கு ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர்.
 
கிசுமு கவுன்டியின் விவசாயத்திற்கான கண்காணிப்பு அதிகாரி ரசாயன தெளிப்பு மட்டுமே இதற்கு ஒரே வழி என்று தெரிவித்துள்ளார்.
 
 
இந்த நடைமுறையில் ஃபென்ஷியான் என்ற ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. அது க்விலியா பறவையைக் காட்டிலும் பிற உயிரினங்களை வெகுவாக அழிக்கக்கூடியது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், பிற தாவரங்கள், விலங்குகள், சுற்றுச்சூழல் அமைப்பு மட்டுமல்லாமல் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
 
எல்லா உயிரினங்களை கொன்றுவிட்டு மனிதர்கள் மட்டும் மண்ணில் வாழ முடியாது என்கிறார் மாசேனோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் புவி அறிவியல் பேராசிரியர் ரஃபேல் காபியோ
 
மேலும், ரசாயன தெளிப்புக்கு பதிலாக, பறவையை அச்சுறுத்தி வெளியேற்றுவது, பறவையை பிடித்து உண்பது போன்ற பாரம்பரிய முறைகளை பயன்படுத்தலாம் என்றும் அவர் தெரிவிக்கிறார்.
 
ஆனால், ரசாயன தெளிப்பு முறையைக் கண்காணிக்கும் ஓன்யங்கோ, விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறது என்றும், தேசிய சுற்றுச்சூழல் மேலாண்மை நிர்வாகம் இதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கிறார். எந்தவித அக்கறையும் இல்லாமல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நடவடிக்கைகளில் நாங்கள் ஈடுபட மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
 
பயிர்காப்பு சேவைகளின் இயக்குநர் காலின்ஸ் மராங்கு, பறவைகளை கொல்வதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.
 
விவசாயத்தை காக்க நாங்கள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம் என்கிறார் அவர். ஆனால் எந்த நடவடிக்கையும் விவசாயிகளுக்கு பயன் அளிக்கவில்லை.
 
பெரும் பயிர்கள் ஏற்கனவே சேதம் அடைந்த பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எந்த பயனும் இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பறவைகளால் இம்முறை அறுவடை பாதியளவு குறைந்துள்ளது என விவசாயிகள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்