உலகம் முழுவதும் அனைவரிடமும் ஸ்மார்ட்போன், கணினிகள் உள்ளிட்ட தொழில்நுட்ப சாதனங்கள் உள்ள நிலையில் இணைய சேவை இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. உலக நாடுகள் முழுவதும் இணைய சேவை உள்ள நிலையில் பல இடங்களில் புரட்சிக்கான ஆயுதமாகவும் இணையம் மாறி விடுகிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டம் பெருமளவில் பேசப்பட்டதற்கு இணைய சேவையும், சமூக வலைதளங்களும் ஒரு காரணம். ஆனால் ஆபத்துக்குரிய அல்லது வன்முறை நடக்கும் பகுதிகளில் வன்முறை கருத்துகள் பரவுவதை தடுப்பதற்காக இணையத்தை தடை செய்வது மற்றும் நாடுகளுக்கு இடையேயான சைபர் அட்டாக் காரணமாக இணைய முடக்கம் உள்ளிட்ட சில நடவடிக்கைகளும் பல நாடுகளில் எடுக்கப்படுவதுண்டு.
அவ்வாறாக கடந்த 2022ம் ஆண்டில் அதிகமாக இணையம் முடக்கம் செய்யப்பட்ட நாடுகள் குறித்த பட்டியலை அமெரிக்க ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது, அதில் 84 முறை இணையத்தை தடை செய்து இந்தியா முதல் இடத்தில் உள்ளது. அதில் 49 இணைய முடக்கம் காஷ்மீரில் கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்பட்டது.
கடந்த ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக போர் நடந்து வரும் உக்ரைனில் 22 முறை இணையம் முடக்கப்பட்டுள்ளது. 18 முறை இணைய முடக்கத்துடன் ஈரான் மூன்றாவது இடத்தில் உள்ளது. போர் நடந்து வரும் உக்ரைனை விட இந்தியாவில் அதிகமுறை இணையம் முடக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் காஷ்மீரில் சில நாட்களுக்கு ஒருமுறை சில மணி நேரங்கள் மட்டுமே முடக்கப்பட்ட நடவடிக்கையும் இதில் சேர்த்தி என்பதால் அதிக எண்ணிக்கை தெரிவதாகவும் சிலர் கூறுகின்றனர். இணையம் முடக்கப்படும் நாடுகளில் கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவின் பெயர் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது