கொரோனா வைரஸ் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு 60 நாட்களுக்கும் மேலாக இந்தியாவில் நடைமுறையில் உள்ளது. ஆனாலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6000 பேருக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 146 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று வரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4 லட்சமாக உள்ளது.
இது சம்மந்தமாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வீடியோ கான்பரன்ஸிங் மூலமாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது ‘இந்தியாவில் ஊரடங்கு என்ன நோக்கத்துக்காக கொண்டு வரப்பட்டதோ அது தோல்வி அடைந்துவிட்டது. 60 நாட்களாக ஊரடங்கில் இருந்தாலும், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிவேகமாக உயரும் ஒரே நாடு இந்தியா மட்டும்தான். ஆனால் இந்த நேரத்தில் மத்திய அரசு படிப்படியாக ஊரடங்கை தளர்த்திக் கொண்டு வருகிறது.
வைரஸ் தொற்று வேலையின்மை பிரச்சினையை பெரிதாக்கியுள்ளது. இதனால் பல நிறுவனங்கள் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஜிடிபியில் 10 சதவிகிதத்தை பொருளாதார நிதித் தொகுப்புக்கு செலவு செய்ய உள்ளதாக பிரதமர் கூறுகிறார். ஆனால், 1 சதவிகிதத்திற்கும் குறைவான அறிவிப்புகளே வெளியாகியுள்ளன. ’ எனப் பல குற்றச்சாட்டுகளை வைத்துள்ளனர்.