கை கோர்க்கும் சீனா - இந்தியா! இமாச்சலம் வழி வணிக பாதை! - அமெரிக்காவுக்கு ஆப்பா?

Prasanth K

திங்கள், 25 ஆகஸ்ட் 2025 (12:56 IST)

இந்தியாவிற்கு அதிக வரிவிதித்து அமெரிக்கா தொடர்ந்து சீண்டி வரும் நிலையில் சீனா, இந்தியாவுடன் வணிகத்தை மேலும் விரிவுப்படுத்தும் வகையில் மீண்டும் இமாச்சல வழி வணிகத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.

 

அமெரிக்கா தொடர்ந்து இந்தியாவிற்கு வரிகளை விதித்ததுடன், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளோடு கொஞ்சி குலாவி வருவது உலகளாவிய அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவாக இருப்போம் என சீனா தெரிவித்திருந்த நிலையில், இந்தியாவுக்கு ஏற்றுமதியாகும் காந்த கனிமங்கள், உரங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியது.

 

அதை தொடர்ந்து தற்போது இந்தியா - சீனா இடையே மீண்டும் விமான போக்குவரத்தை தொடங்குதல் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் ஷிப்கி லா கணவாய் வழியாக எல்லை தாண்டிய வர்த்தகத்தை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவற்றிற்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன. 

 

மேலும் நீண்ட காலமாக எல்லை பிரச்சினை காரணமாக கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கு அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் அதிலும் சாதகமான பதிலளிக்க சீனா பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளான சீனாவும், இந்தியாவும் நட்புறவையும், பொருளாதார உறவையும் மேம்படுத்தி வருவது ஆசிய நாடுகளில் பெரும் வலுவை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. இது அமெரிக்காவிற்கு ஒருவகையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்