டாஸ்மாக் விற்பனையில் காட்டிய அக்கறையை, விவசாயிகளிடம் காட்டவில்லை': நயினார் நாகேந்திரன்

Siva

சனி, 25 அக்டோபர் 2025 (14:36 IST)
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நெல் கொள்முதல் தாமதம் குறித்து தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் நேரடி கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த பின் அவர் பேசுகையில், "டாஸ்மாக் விற்பனை இலக்குகளில் அரசு காட்டிய அக்கறையை, விவசாயிகளின் துயரத்தில் காட்டவில்லை" என்று குற்றம் சாட்டினார்.
 
டெல்டா மாவட்டங்களில் செப்டம்பரிலேயே தொடங்க வேண்டிய கொள்முதல் பணி தாமதமானதால், போதிய சாக்குகள் மற்றும் லாரிகள் இன்றி நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைத்து வீணாவதற்கு தமிழக அரசே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார்.
 
மேலும், கொள்முதல் தாமதத்திற்கு மத்திய அரசின் கலப்பு அரிசி கொள்கைதான் காரணம் என்று அமைச்சர் பொய்க் குற்றச்சாட்டை சுமத்துவதாகவும் அவர் கண்டித்தார். ரூ.10 கோடியில் வாங்கப்பட்டதாக கூறப்படும் வானிலை ஆய்வு கருவி செயல்பாட்டுக்கு வராதது குறித்தும் சந்தேகம் எழுப்பினார். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்