ஆந்திரப் பிரதேச மாநிலம் அனகாப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அரசு மகளிர் ஜூனியர் கல்லூரியில், 17 வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வேதியியல் விரிவுரையாளர் கைது செய்யப்பட்டார்.
கல்லூரியின் மதிய உணவு இடைவேளையின் போது பாதிக்கப்பட்ட மாணவி, தனது வகுப்பு தோழிகளுடன் ஒரு கிராம விழாவிற்கு செல்ல, வேதியியல் விரிவுரையாளரிடம் அனுமதி கேட்டுள்ளனர். அவர் விலங்கியல் விரிவுரையாளர் மூலம் தொலைபேசியில் மாணவியின் குடும்பத்தினரிடம் விசாரித்து, அனுமதி மறுத்துள்ளார். இதனால் அவர்கள் வகுப்புக்கு திரும்பி சென்றனர்.
பின்னர், பிற்பகல் முதல் பீரியட் முடிந்ததும், மற்றொரு மாணவி மூலம் வேதியியல் விரிவுரையாளர் அந்த மாணவியை முதல் மாடியில் உள்ள ஆய்வகத்திற்கு வரவழைத்துள்ளார். அங்கு சென்றபோது, அவர் மாணவியின் தேர்வு தாளை சரிபார்ப்பது போல் நடித்து, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். மாணவியின் மார்பிலும், இடுப்பிலும் கை வைத்ததாக தெரிகிறது.
இதை அந்த மாணவி உடனடியாகத் தனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. பின்னர், தாயிடம் நடந்ததை விவரித்துள்ளார். இதையடுத்து, ஆகஸ்ட் 24 அன்று பெற்றோர் பரவாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு ஒரு பெண் உதவி ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், முதற்கட்டமாக குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குத்தாலா ஸ்ரீதர் என்ற அந்த விரிவுரையாளர் ஆகஸ்ட் 24 அன்று இரவு 10 மணியளவில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்.