இந்திய அரசின் மத்திய மீன்வள, கால்நடை வளர்ப்பு மற்றும் பால்பண்ணை துறை அமைச்சராக இருந்து வருபவர் பர்ஷோத்தம் ரூபாலா. நேற்று இவர் ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் சதாபடா என்ற பகுதியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள சென்றார்.
இதற்காக மத்திய அமைச்சர் ரூபாலா மற்றும் பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா இருவரும் சிலிகா என்ற ஏரி வழியாக குர்தா மாவட்டத்தில் இருந்து புரி மாவட்டத்திற்கு படகில் பயணித்தனர். ஏரியின் மறுப்பகுதியில் அவரை வரவேற்க அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் என பலரும் மாலையும், கையுமாக காத்திருந்தனர். ஆனால் வந்து சேர வேண்டிய நேரத்தை கடந்து 2 மணி நேரமாகியும் அமைச்சரின் படகு வராததால் அந்த மக்கள் பீதியில் உறைந்தனர்.
உடனடியாக மற்றொரு படகை எடுத்துக் கொண்டு அதிகாரிகள் ஏரியை ஆய்வு செய்ய புறப்பட்டனர். அப்போது ஏரியின் நடுவழியில் அமைச்சர் பயணித்த படகு மிதந்துக் கொண்டிருந்துள்ளது. மீன் வலையில் சிக்கி மோட்டார் செயல் இழந்ததால் படகு பயணிக்க முடியாமல் நடு ஏரியில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அதிலிருந்து அமைச்சரை பத்திரமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.