12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி எப்போது? – இன்று முக்கிய முடிவு!
வெள்ளி, 29 ஏப்ரல் 2022 (08:35 IST)
இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து முடிவெடுக்கப்பட உள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வரும் நிலையில் மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆரம்பத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. பின்னர் 15 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது தளர்வுகள் காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 15 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த கோர்பாவேக்ஸ், கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடுப்பூசி செலுத்தும் திட்டம் எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் இன்று தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் 5 முதல் 12 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி எப்போது செலுத்துவது என முடிவு செய்து மத்திய அரசு பரிசீலிக்கப்பட உள்ளது. அதன்பின்னர் மத்திய அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.