கல்லூரிகளில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை: முதல்வரின் அதிரடி அறிவிப்பு

வெள்ளி, 18 அக்டோபர் 2019 (19:02 IST)
தற்போதைய டெக்னாலஜி உலகில் செல்போன் இல்லாத நபர்களே இல்லை எனலாம். பள்ளி மாணவர்கள் கையில் கூட ஆண்ட்ராய்டு போன் இருப்பதை காண முடிகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச பாஜக அரசு, உபி கல்லூரிகளில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்விச் சூழலை மேம்படுத்தும் வகையில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதுகுறித்து மாநில உயர்கல்வித் துறை இயக்குநரகம் உபியில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. 
 
அந்த சுற்றறிக்கையில் கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் செல்போன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் செல்போன்களை பயன்படுத்த கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது
 
உபி மாநிலத்தில் கல்வி கற்கும் சூழலை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாகவும் அதற்கு மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. செல்போன் என்பது அத்தியாவசமானது மட்டுமின்றி கல்வி கற்கவும் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட இந்த தடை தேவையில்லாத ஒன்று என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்