தூய்மை இந்தியா குறும்படப் போட்டி: ரூ.10 லட்சம்

திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (19:33 IST)
தூய்மை இந்தியா குறும்படப்போட்டியில் முதல் பரிசை வெல்வோருக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.


 

 
கடந்த 2014 ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்தார். இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க அனில் அம்பானி, சசி தரூர், கமல்ஹாசன், பிரியங்கா சோப்ரா, சல்மான் கான் போன்ற பிரபலங்கள் விளம்பர தூதர்களாக நியமிக்கப்பட்டனர். 
 
தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டு 2 ஆண்டுகள் முடிவடைந்ததையொட்டி தூய்மை இந்தியா குறும்படப்போட்டி ஒன்றை மத்திய அரசு அறிவித்துள்ளது. 
 
போட்டியில் கலந்து கொள்ளும் குறும்படங்களை அனுப்பிவைக்க வருகின்ற செப்டம்பர் 10-ம் தேதி கடைசி நாள். போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. 3 நிமிடங்களுக்கு மிகாமல் குறும்படங்கள் இருக்க வேண்டும். போட்டியில் முதல் பரிசு பெறும் குறும்படத்திற்கு ரூ 10 லட்சம் பரிசாக வழங்கப்படும். 
 
2-வது பரிசு பெறும் 3 குறும்படங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாயும், 3-வது பரிசு பெறும் 6 குறும்படங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என மத்திய அரசின் சார்பில் இயங்கும் தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவர்கள் www.nfdcindia.com என்ற இணையதளத்திற்கும் சென்று தேவைப்படும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்