இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் ரத்தன் டாடா என்பதும், அவருக்கு தற்போது 86 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் வழக்கமான பரிசோதனைகளுக்காக மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ரத்தன் டாடா பாரம்பரியம் மிக்க டாடா குழுமத்தின் நிறுவனர் ஜாம்ஷெட்ஷி டாடாவின் கொள்ளுப்பேரன். அமெரிக்காவில் படிப்பை முடித்த இவர் 1962 ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்தார். நஷ்டத்தில் இயங்கிவந்த நேஷனல் ரேடியோ அண்ட் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதை அவர் தனது நிர்வாகத்திறனால் மீண்டெழச் செய்தார்.
1991 ஆம் ஆண்டு டாடா குழும தலைவர் பொறுப்பை ஏற்றார். இவரின் தலைமையில் டாடா குழுமம் தழைத்தோங்கியது. மத்திய தர வர்க்க மக்கள் பயன்பாட்டுக்கு டாடா இண்டிகா மற்றும் 1 லட்சம் ரூபாய் செலவில் டாடா நானோ ஆகியக் கார்களை இவர் கொண்டுவந்தார். 2012 ஆம் ஆண்டு டாடா குழும தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். அதன் பின்னர் டாடா குழும அறங்காவலர் பொறுப்பில் இருந்து வந்தார். அவர் திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வந்தார்.