கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில், 'மூளை உண்ணும் அமீபா' என்று அழைக்கப்படும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் நோய்த்தொற்று காரணமாக மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு சிறுமி உயிரிழந்தது சுகாதார துறை தெரிவித்துள்ளது.
ஒன்பது வயது சிறுமி இந்த நோய்த்தொற்றுக்கு பலியான நிலையில், மற்ற இருவரும் கோழிக்கோடு மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார துறை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
மூளை உண்ணும் அமீபா, பொதுவாகத் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாழும் ஒரு ஒட்டுண்ணியாகும். தேங்கி நிற்கும் நீர்நிலைகளில் குளிக்கும் அல்லது நீச்சலடிக்கும் நபர்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படுகிறது. மூளைக்கும் மூக்கிற்கும் இடையில் உள்ள மெல்லிய சவ்வு அல்லது காதுக்குள் இருக்கும் துவாரங்கள் வழியாக இந்த அமீபா மூளைக்குள் நுழைந்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்த நோய்த்தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவாது.