ஆர்.கே.நகரை மிஞ்சிய பார் கவுன்சில் தேர்தல்: ஐகோர்ட் நீதிபதி வேதனை

செவ்வாய், 30 ஜனவரி 2018 (07:03 IST)
திருமங்கலம், ஆர்.கே.நகர் தேர்தல்களில் பணமே வெற்றியை நிர்ணயம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த வெற்றி பார்முலாவை அரசியல்வாதிகள் மட்டுமின்றி பலரும் பின்பற்ற தொடங்கிவிட்டனர்.

தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் பதவிக்கு வரும் மார்ச் 28ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல்களில் போட்டியிடும் வழக்கறிஞர்கள், ஓட்டு போடும் ஒவ்வொரு வழக்கறிஞர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை பணம் கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுபவர்கள் ஒவ்வொருவரும் 3 கோடி முதல் 4 கோடி வரை செலவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், மதுரை ஒத்தக்கடையை சேர்ந்த வக்கீல் பாஸ்கர்மதுரம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், தாரணி ஆகியோர் இதுகுறித்து கூறியபோது, 'தமிழகம்-புதுவை பார் கவுன்சில் தேர்தல் நடைமுறைகள் திருமங்கலம், ஆர்.கே.நகர் தொகுதி பார்முலாவை பின்பற்றி நடப்பது போல கருதத்தோன்றுகிறது என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். மேலும்  இந்த வழக்கில் வருமான வரித்துறை தலைமை இயக்குனரை எதிர்மனுதாரராக சேர்க்கவும், வக்கீல்கள் சேமநலநிதியில் எத்தனைபேர் ஆயுள் சந்தா செலுத்தி உள்ளனர் என்று பார் கவுன்சில் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உத்தரவிட்டனர்.

மேலும் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில், நடைபெற்ற ஆசிரியர் சங்கத் தேர்தலிலும் ஆர்.கே.நகர் பாணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்