ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை பிடிக்க போலீசாரும் இந்திய ராணுவமும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் செக்டார், கிருஷ்ணா காட்டி அருகே நேற்று மாலை பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
எனினும், இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கரவாதிகளை பிடிக்க ஜம்மு காஷ்மீர் போலீசாரும், இந்திய ராணுவமும் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கடந்த மாதம் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது.
இதை அடுத்து காஷ்மீரில் பயங்கரவாதம் குறைந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்து வருகிறது. ஆனால் பயங்கரவாத தாக்குதல்கள் நின்றபாடில்லை என்றும் முன்பைவிட தற்போது அதிக எண்ணிக்கையில் நிகழ்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.