முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நாட்டின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்துள்ளார். 1996ம் ஆண்டு 13 நாட்களும், 1998 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் 13 மாதங்களும், 1999 முதல் 2004ம் ஆண்டு வரை 5 ஆண்டுகள் என மூன்று முறை இந்தியாவின் பிரதமராக இருந்துள்ளார்.
இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ம் தேதி மக்களவை சபாநாயர் சுமித்ரா மகாஜன், துணை சபாநாயகர் தம்பித்துரை, காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நாட்டிற்கு பெரும் பங்கு ஆற்றிய முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உருவப்படத்தை பாராளுமன்றத்தில் திறக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
இதன்படி பாராளுமன்ற வளாகத்தில் உள்ள மத்திய ஹாலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் பிப்ரவரி 12ம் தேதி திறக்கப்பட உள்ளது. வாஜ்பாயின் உருவ படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.