பைக்கில் 3 பேர் செல்ல அனுமதியா? மத்திய அமைச்சர் சொன்ன விளக்கம்!

திங்கள், 5 ஜூன் 2023 (10:40 IST)
இருசக்கர வாகனங்களில் 3 பேர் அமர்ந்து பயணிக்க கேரள அரசு அனுமதி கோரிய நிலையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.



கேரளாவில் சாலை பாதுகாப்பை நவீனப்படுத்தும் வகையில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் கேரள மாநிலத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிசிடிவி கேமராக்கள் சாலை விதிகளை மீறுபவர்களை கண்டுபிடித்து அபராதம் விதித்து வருகிறது.

இந்நிலையில் பைக்கில் 12 வயதுக்கு குறைவான குழந்தைகளை மூன்றாவது நபராக ஏற்றி செல்ல சாலை விதிகளில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும், கேரள மாநிலத்திற்கு விலக்கு அளிக்க கோரியும் கேரள அரசு மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரிக்கு கோரிக்கை விடுத்திருந்தது. கேரளாவில் நடுத்தர, ஏழை குடும்பத்தினர் கார் வாங்குவது இயலாத காரியம் என்பதால், பைக்கில் மனைவியுடன் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகளையும் அழைத்து செல்ல அனுமதிக்க இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், இதுகுறித்த அறிவிப்பு வரும் வரை அவ்வாறாக 3 பேராக பயணிப்பவர்களுக்கு அபராதம் இல்லை என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் கேரளாவின் இந்த கோரிக்கைக்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இருசக்கர வாகனத்தில் 3 பேர் அமர்ந்து செல்வதை அனுமதிப்பது சரியான நடவடிக்கையாக இருக்காது என்று தெரிவித்துள்ளார். மத்திய மோட்டார் வாகன சட்டத்தின்படி இது தடை செய்யப்பட்டது, மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் இந்த போக்குவரத்து விதிகள்தான் பின்பற்றப்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்