ஆந்திராவை புரட்டிப்போட்ட மழை வெள்ளம்! அனைத்து உதவிகளும் செய்வதாக பிரதமர் வாக்குறுதி!

Prasanth Karthick

திங்கள், 2 செப்டம்பர் 2024 (08:05 IST)

ஆந்திராவில் பெய்து வரும் கனமழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

 

 

ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ஆறுகள் முழுவதும் வெள்ளம் செல்லும் நிலையில், குடியிருப்பு பகுதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் ரயில் தண்டவாளங்கள் நீரில் மூழ்கியிருக்கும் நிலையில் பல்வேறு ரயில்கள் ஆங்காங்கே இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த வெள்ளத்தால் இதுவரை 9 பேர் பலியாகியுள்ள நிலையில், வெள்ளம் ஏற்பட்ட 4 மாவட்டங்களில் 17 ஆயிரம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன் அங்கிருந்தபடியே அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார்.

 

ஆந்திரா வெள்ளம் குறித்து சந்திரபாபு நாயுடுவுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கனமழை, வெள்ள பாதிப்புகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்துள்ளார். மேலும் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய சம்பந்தப்பட்ட மத்திய அரசுத் துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்