குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, நடியா மாவட்டத்தை சேர்ந்த பள்ளி ஆசிரியர் அர்ஜுன் பக்ஷி மற்றும் அவரது மனைவி ஜூமா பக்ஷி ஆகியோர் ஒரு நெகிழ்ச்சியான செயலை செய்துள்ளனர். ஆனால் இந்த நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த பெண்களுக்கு எதிரான கொடூரமான குற்ற சம்பவங்களால் பொதுமக்களிடையே கோபம் அதிகரித்துள்ள நிலையில், இந்த பெற்றோர் தங்கள் ஆறு வயது மகள் அரித்ரிகாவை 'கோஜாகரி லட்சுமி பூஜை'யின் போது உயிருள்ள லட்சுமி தேவியாகவே கருதி வணங்கினர்.
களிமண் சிலையை வைத்து வழிபடுவதற்கு பதிலாக, தங்கள் மகளை லட்சுமி தேவி அலங்காரத்தில் அமர வைத்து, பூசாரி தலைமையில் சடங்குகளைச் செய்தனர். "ஒவ்வொரு பெண் குழந்தையும் லட்சுமியின் வடிவமே. அவர்கள் மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்," என்று ஜூமா பக்ஷி கூறினார்.
"இந்தச் சடங்கின் மூலம், ஒவ்வொரு பெண்ணையும் மரியாதையுடன் நடத்த வேண்டும் என்றும், குழந்தை துஷ்பிரயோகம் போன்ற மனிதாபிமானமற்ற நடைமுறைகளை சமூகத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம்," என்று அர்ஜுன் பக்ஷி வலியுறுத்தினார்.
ஒரு மகளை லட்சுமியாக வணங்குவது மத ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அர்த்தமுள்ளது என்று பூசாரி பாபோன் பட்டாச்சார்யா பாராட்டினார். பாலின வன்முறையால் பாதிக்கப்பட்ட சமூகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் மதிப்பை உயர்த்தியதற்காக அக்கம் பக்கத்தினர் இந்தத் தம்பதியினரின் செயலைப் பாராட்டினர். ஆனால் இந்த செயலுக்கு சிலர் கண்டனம் தெரிவித்து, இது குழந்தையை கொடுமைப்படுத்துவது போல் உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.