பாரத மாதாவுக்கு மாலை அணிவித்த தலித் மாணவருக்கு அடி,உதை! – உ.பியில் அதிர்ச்சி!
வியாழன், 26 ஜனவரி 2023 (09:34 IST)
உத்தர பிரதேசத்தில் பாரத மாதாவுக்கு மாலை அணிவிக்க சென்ற தலித் மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூரில் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு தலித் மாணவர் அர்ஜூன் ராணா படித்து வருகிறார். சமீபத்தில் அங்குள்ள பாரத மாதா சிலைக்கு அர்ஜூன் மாலை அணிவிக்க சென்றுள்ளார். ஆனால் அவர் காலணி அணிந்து சென்றதாக காரணம் சொல்லி பிற மாணவர்கள் அவரை தடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த பிரச்சினை முடிந்தாலும் அர்ஜூன் மீது அங்குள்ள பிற சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் கோபத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கல்லூரி மைதானத்தில் இருந்த அர்ஜூன் ராணாவை ஒரு மாணவ கும்பல் சென்று கடுமையாக அடித்து, உதைத்து தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அர்ஜூன் ராணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மாணவர் கும்பல் அவரை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தலைமறைவான மாணவர்களை தேடி வருகின்றனர்.