ஒடிசா மாநிலத்தின் போலாங்கிர் பகுதியை சேர்ந்தவர் ரெஷ்மா பெஹரா. 19 வயதான இவர் அடிக்கடி உடல்நல பாதிப்புகளால் அவதியுற்று வந்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் இவரது தாயார் உயிரிழந்துள்ளார். அதன்பிறகு தான் இவருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட துவங்கியுள்ளது. தீவிர தலைவலியால் அவதிப்பட்டதால் பீமா பாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரின் தலையை சிடி ஸ்கேன் மூலம் ஆராய்ந்ததில் மண்டை ஓட்டின் உள்ளே பல ஊசிகள் இருப்பது கண்டறியப்பட்டது. 22 ஊசிகள் வரை இருக்குமென்று கணித்த மருத்துவர்கள் அதில் 8 ஊசிகளை எடுத்துள்ளனர். ஆனால், அந்தப் பெண்ணுக்கு வலி மேலும் தீவிரமடைந்ததால் அவரை வீர் சுரேந்திர சாய் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கடந்த வியாழன் (ஜூலை 18) அன்று சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட ஸ்கேன் மற்றும் பரிசோதனைகளைத் தொடர்ந்து, அவரது மண்டை ஓட்டிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 70 ஊசிகள் அகற்றப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து நேற்று நரம்பியல் நிபுணர்களால் மீண்டும் நடந்தப்பட்ட அறுவை சிகிச்சையில் மேலும் 7 ஊசிகள் அகற்றப்பட்டன.