பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாள் போலீஸ் காவல்.! கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் உத்தரவு..!!

Senthil Velan

வெள்ளி, 31 மே 2024 (17:07 IST)
பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை ஆறு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு கர்நாடகா சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
 
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களைப் பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டதாகப் பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது.

மேலும் பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து இந்தப் புகார் குறித்துச் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 
அதனைத் தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு தப்பிச் சென்றுள்ள நிலையில் அவருக்கு எதிராக விமான நிலையங்களுக்கு 2-வது லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மேலும், வெளிநாடு தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய சிபிஐ ப்ளூ கார்னர் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. அதன்படி, பிரஜ்வல் ரேவண்ணாவைப் பிடிக்க போலீசார் தீவிரம் காட்டி வந்தனர். 
 
இதனிடையே  பிரஜ்வல் ரேவண்ணா மே 31-ஆம் தேதி எஸ்.ஐ.டி. முன்பு ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி வெளிநாட்டில் இருந்து பெங்களூர் வந்த பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்தில் வைத்து சிறப்பு புலனாய்வு குழுவினர் இன்று அதிகாலை கைது செய்தனர்.

ALSO READ: செல்போனை 3 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும்.! டிடிஎஃப் வாசனுக்கு போலீஸ் நோட்டீஸ்..!!
 
இந்நிலையில் கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தில் பிரஜ்வல் ரேவண்ணாவை போலீசார் ஆஜர்படுத்தினர். அவரை ஆறு நாட்கள் காவல் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்