ஆசிரியரின் செயலால் தற்கொலை செய்த 5-ஆம் வகுப்பு மாணவனின் உருக்கமான கடிதம்!

சனி, 23 செப்டம்பர் 2017 (12:19 IST)
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் ஒருவன் தனது ஆசிரியை கொடுத்த தண்டனையால் மனம் உடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சோக சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில் அந்த மாணவன் தற்கொலை செய்துகொள்ளும் முன்னர் தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் ஒன்று சிக்கியுள்ளது.


 
 
தற்கொலை செய்துகொண்ட நவநீத் என்ற மாணவன் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார். அவன் சரியாக படிக்காத காரணத்தால் வகுப்பு ஆசிரியை அவனுக்கு தண்டனை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் மாணவன் மனமுடைந்து தற்கொலை செய்துள்ளான்.
 
மாணவனின் புத்தகப்பையில் இருந்து கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளார் அவனது தந்தை. அந்த கடிதத்தில், அப்பா இன்று எனது முதல் தேர்வு, ஆனால் எனது வகுப்பு ஆசிரியை என்னை தொடர்ந்து மூன்று வகுப்புகளுக்கு நிற்க வைத்து தண்டனை அளித்தார். இதனால் நான் அழுதுகொண்டே நின்றுகொண்டிருந்தேன்.
 
ஆனால் ஆசிரியை நான் அழுதுகொண்டு இருப்பதை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பாடம் நடத்துவதிலேயே குறியாக இருந்தார். எனவே நான் எனது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். இது போன்ற தண்டனையை வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம் என எனது ஆசிரியை கேட்டுக்கொள்கிறேன் என உருக்கமாக மாணவன் நவநீத் எழுதியுள்ளான்.
 
இதனையடுத்து இந்த கடிதத்தை வைத்து மாணவனின் தந்தை அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் தொடர்ந்து மாணவனின் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்