அம்மாடியோவ் ஒரு எம்எல்ஏவுக்கு 15 கோடி விலை: கூவத்தூர் பாலிசியை பின்பற்றும் பாஜக?
ஞாயிறு, 30 ஜூலை 2017 (19:31 IST)
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஆட்சியை காப்பாற்ற சசிகலா கூவத்தூர் பாலிசியை அறிமுகப்படுத்தினர். அங்கு நடந்த சம்பவங்கள் நாடே அறிந்த கதை.
இந்நிலையில் இந்த கூவத்தூர் பாலிசியை குஜராத்தில் பாஜக பின்பற்றுவதாக பரபரப்பாக பேசப்படுகிறது. குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 கோடி ரூபாய் கொடுத்து பாஜக தங்கள் பக்கம் இழுக்க விலைபேசி முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வருகின்றன.
குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக பாஜகவின் ஸ்மிருதி இரானி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தல் அடுத்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.
மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் அகமது படேல் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அகமது படேல் வெற்றிபெற காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரின் வாக்குகள் தேவை. இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சித்து வருகிறது.
அதன் பலனாக முன்னதாக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மூன்று பேர் பாஜக பக்கம் சாய்ந்துவிட்டனர். இதனையடுத்து உஷாரான காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்கள் 44 பேரையும் அவசர அவசரமாக குஜராத்தில் இருந்து பெங்களூருவிற்கு அழைத்து சென்று சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் தலா 15 கோடி ரூபாய் கொடுத்து பாஜக தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாக பெங்களூருவில் தங்கியுள்ள எம்எல்ஏக்கள் கூறியதாக தகவல்கள் வருகின்றன. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.