பஞ்சாப் மாநிலத்தில் அமிர்தசரஸ் மாவட்டத்தில் மஜித்தா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் அடுத்தடுத்து சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து, கள்ளச்சாராயம் விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும், பராப்ஜீத் சிங் என்பவர் தான் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்தார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ கள்ளச்சாராயம் அருந்தியவர்கள். ஆபத்தான நிலையில் இருப்பதாக எங்களுக்கு தகவல் வந்தவுடன், சம்பவம் இடத்திற்கு சென்று உயிருக்கு போராடியவர்களை மருத்துவமனையில் அனுமதித்தோம். மருத்துவ குழுக்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகின்றன. பலி எண்ணிக்கை அதிகரிக்காமல் இருக்க மருத்துவர்கள் தீவிர முயற்சி எடுத்து வருகிறார்கள்.
கள்ளச்சாராயம் விற்பனை செய்தவரையும், அவருக்கு உடந்தையாக இருந்தவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம்,” என்று தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.