அணுசக்தி ஒத்துழைப்பு: இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் ஒப்பந்தம்
வெள்ளி, 6 நவம்பர் 2009 (19:10 IST)
சிவில் அணுசக்தித் துறையில் ஒருங்கிணைந்து செயல்பட்டு ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும் புதுடெல்லியில் இன்று கையெழுத்திட்டுள்ளன.
இந்திய அணுசக்தி ஆணையத்தின் தலைவர் டாக்டர் அனில் ககோட்கரும், ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு விவகாரங்களுக்கான ஆணையர் பெனிடா பெரிரோ-வால்ட்னரும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
புதுடெல்லி வந்துள்ள சுவீடன் பிரதமரும், ஐரோப்பிய யூனியனின் தலைவருமான பிரடெரிக் ரின்பெல்ஃட், பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து பேசிய பின் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
பிரடெரிக்குடன் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மேனுவல் பொரோசோவும் பேச்சு நடத்தினார்.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் 10ஆவது உச்சி மாநாட்டில் இந்த அணுசக்தி ஒப்பந்தம் முக்கியமான ஒன்று என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டார்.
எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி தேவை அதிகரித்து வரும் நிலையில், இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுவதாக கூட்டாக செய்தியாளர்களிடம் பேசுகையில் பிரதமர் கூறினார்.
விஞ்ஞான புரிந்துணர்வு, தொழில்நுட்ப திறன் போன்றவற்றுக்கும் நீண்டகால அடிப்படையில் இந்த ஒப்பந்தம் அவசியம் என்றும் பிரதமர் கூறினார்.
உலக அளவிலான பொருளாதார நெருக்கடி, தட்பவெப்பநிலை மாற்றம், அணுஆயுதமற்ற நிலை, சர்வதேச நிறுவனங்களில் சீர்திருத்தம் போன்றவற்றில் இந்தியாவும், ஐரோப்பிய யூனியனும் இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்யப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.