சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள மோதி விளையாடு பாப்பா எனும் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு குறும்படம் இன்று வெளியாகியுள்ளது.
முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு குழந்தைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாவது தற்போது அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட அயனாவரத்தில் மாற்றுத் திறனாளி சிறுமிக்குப் பாலியல் தொடர்ந்து ஏழு மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்த 17 பேர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்களில் தாய், தந்தை என இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தைகள் அதிக நேரம் தம் பெற்றோரின் கவனிப்பில் இல்லாமல் தனிமையில் அல்லது பெற்றோரல்லாதவர்களின் கவனிப்பில் இருக்க நேரிடுகிறது. இதுமாதிரி குழந்தைகள் அந்நியர்கள் மூலமாகவோ அல்லது தெரிந்தவர்கள் மூலமாகவோ பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகின்றனர்.
மேலும் இத்தகைய கொடுமைகளுக்கு உள்ளாகும் குழந்தைகள் தனக்கு நடந்தது என்னவென்று புரியாமலும் அதை பெற்றோரிடம் எப்படி சொல்வது என்று தெரியாமலும் தங்கள் மனதுக்குள்ளேயே வைத்து புதைத்து தங்களையே வருத்திக் கொள்கின்றனர். பாலியல் சம்மந்தமான நோய்களுக்கு ஆட்படுபவர்கள் பெரும்பாலும் இதுபோல சிறுவயதில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளானவர்களாகவே இருக்கின்றனர்.
இத்தைகைய பிரச்சனைகளில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் அந்த நபர்களை அடையாளம் தெரிந்து கொள்ளவும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் விதமாகவும் வெளியாகி இருக்கிறது மோதி விளையாடு பாப்பா எனும் விழிப்புணர்வு குறும்படம். சிவகார்த்திக்கேயன் நடித்துள்ள இந்த குறும்படம் குழந்தைகள் தங்கள் உடலில் உள்ள தொடக்கூடிய பாகங்கள் பற்றியும் தொடக்கூடாத பாகங்கள் எவையெவை என்பதைப் பற்றியும் பாதுகாப்பான தொடுதல் மற்றும் பாதுகாப்பில்லாத தொடுதல் பற்றியும் குழந்தைகளுக்கு புரியும் விதத்தில் எடுத்துக் கூறுகிறது.
மேலும் தவறாக நடந்து கொள்பவர்களை எவ்வாறு அடையாளம் காண்பது என்றும் யாரேனும் தவறாக நடந்து கொண்டால் அதை நம் பெற்றோர் அல்லது பாதுகாப்பாக உணரும் தாத்தா, பாட்டி ஆசிரியர் போன்ற யாரிடமாவது வெளிப்படுத்த வேண்டும் என்பதையும் சிவகார்த்த்க்கேயன் குழந்தைகளுக்கு விளக்குவது போலவும் காட்சிப்படுத்தியுள்ளனர்.
விழிப்புணர்வுள்ள குழந்தையே பாதுகாப்பான குழந்தை எனும் கருத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள இப்படத்தை இயக்குனர் திரு இயக்கியுள்ளார். குழந்தைகளுக்கு பிடித்தமான நடிகரான சிவக்கார்த்திக்கேயன் இதில் நடித்திருப்பதால் இக்குறும்படம் அதிகமான பார்வையாளர்களிடம் வேகமாக பரவி வருகிறது.