மார்வெலுக்கு முரட்டு Comeback!? அதிரடி காட்டும் Deadpool & Wolverine! - திரை விமர்சனம்!

Prasanth Karthick

ஞாயிறு, 28 ஜூலை 2024 (12:23 IST)

மார்வெல் சூப்பர் ஹீரோ யுனிவர்ஸுக்குள் வரவேற்கும் விதமாக டெட்பூல் அண்ட் வுல்வரின் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

 

மார்வெல் காமிக்ஸின் பிரதானமான பல சூப்பர்ஹீரோ கேரக்டர்கள் மார்வெல் ஸ்டுடியோஸ் வசம் இருந்தாலும், ஸ்பைடர்மேன், எக்ஸ் மென் உள்ளிட்ட பல கதாப்பாத்திரங்கள் சோனி, பாக்ஸ் ஸ்டார் உள்ளிட்ட வேறு சில தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்தன. இந்நிலையில் சமீபத்தில் பாக்ஸ் ஸ்டார் நிறுவனத்திடம் இருந்த எக்ஸ் மென் கதாப்பாத்திரங்களை மார்வெல் ஸ்டுடியோஸ் வாங்கியது.

 

அதை தொடர்ந்து மார்வெல் ஸ்டுடியோஸ் தற்போது வெளியிட்டுள்ள டெட்பூல் அண்ட் வுல்வரின் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மியூட்டண்ட்ஸுக்கு என பாக்ஸ் ஸ்டார் உருவாக்கிய அந்த எதிர்பார்ப்புகளை மார்வெல் ஸ்டுடியோஸ் நிறைவேற்றியதா என பார்க்கலாம்

 

லோகி வெப் சிரிஸில் காட்டப்பட்ட டைம் வேரியண்ட் அத்தாரிட்டி TVAவின் ஒரு பிரிவு அதிகாரியாக செயல்படுபவர் பாரடாக்ஸ். வேறொரு யுனிவர்ஸான எர்த் 10005ல் வாழும் டெட்பூல், அங்கு தனது நண்பர்களுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். ஆனால் அந்த யுனிவர்ஸை சேர்ந்த புனித ஆன்மாவானா லோகன் இறந்துவிட்டதால் அந்த யுனிவர்ஸ் மெல்ல அழிந்து வருவதாகவும், அதனால் எர்த் 616 (நமது யுனிவர்ஸ்)-க்கு டெட்பூலை சென்று விடும்படியும் பாரடாக்ஸ் ஒரு சலுகையை தருகிறார்.

 

ஆனால் பாரடாக்ஸிடம் இருந்து மல்டிவெர்ஸ் டிவைஸை திருடும் டெட்பூல் அதை வைத்து வேறு டைமென்ஷன் சென்று அங்குள்ள வுல்வரினை தூக்கிக் கொண்டு வந்துவிடுகிறான். அவனை தனது யுனிவர்ஸில் வைத்தால் தனது யுனிவர்ஸ் அழியாமல் காப்பாற்றலாம் என நினைக்கிறான். ஆனால் விதிகளை மீறி டெட்பூல் இப்படி நடந்து கொண்டதற்காக டெட்பூலையும், வுல்வரினையும் டைம்லைனின் வாய்ட் என்ற நரகத்திற்கு அனுப்பி விடுகிறான் பாரடாக்ஸ். அங்கு மியூட்டண்டுகளின் தலைவரான சார்லஸ் சேவியரின் சகோதரி கசாண்ட்ரா நோவா தனி ஆட்சி நடத்தி வருகிறாள்.

 

 

வாய்டுக்குள் சிக்கிய டெட்பூலும், வுல்வரினும் அங்கிருந்து எப்படி தப்பினார்கள்? டெட்பூல் தனது யுனிவர்ஸை காப்பாற்றினாரா? இல்லையா? என்பதை 2 மணி நேரம் ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் காட்டியுள்ளார்கள். படம் முழுவதும் ரத்தம் தெறிக்கும் காட்சிகளும், ஆபாச இரட்டை அர்த்த வசனங்களும், கெட்ட வார்த்தைகளும் நிறைந்துள்ளதால் இது கண்டிப்பாக குழந்தைகளுக்கான சூப்பர்ஹீரோ படம் அல்ல.

 

நீண்ட காலமாக வுல்வரினாக ஹ்யூ ஜாக்மேனை மீண்டும் திரையில் காண வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசை இந்த படத்தால் நிறைவேறியுள்ளது. பெண்டாஸ்டிக் 4, ப்ளேட் என 90ஸ்களின் உள்ளம் கவர்ந்த ஹீரோக்களின் கேமியோ காட்சிகளில் திரையரங்கமே அதிர்கிறது. டெட்பூல் Fourth Wall ஐ உடைத்து அடிக்கடி ஆடியன்ஸுடன் பேசுவதோடு, பாக்ஸ் ஸ்டார், டிஸ்னியையும் கலாய்க்க செய்வது சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.

 

கடந்த சில படங்களாக போதிய வரவேற்பை மார்வெல் படங்கள் பெறாமல் இருந்து வந்த நிலையில் இந்த படம் கண்டிப்பாக மார்வெலுக்கு சிறப்பான ஒரு கம்பேக்காக அமைந்துள்ளது. 

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்