தமிழ் சினிமாவுக்கே உரிய பழிவாங்கும் ரக கதையை தனது பாணியில் ரஜினி ஸ்டைலில் புது அனுபவமாக மாற்றியிருக்கிறார் லோகேஷ்.
சென்னையில் மேன்சன் ஒன்றை நடத்தி வருகிறார் தேவா (ரஜினிகாந்த்). அவரது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) விசாகப்பட்டிணத்தில் தனது மகள் ப்ரீத்தி (ஸ்ருதி ஹாசன்) உடன் வாழ்ந்து வருகிறார். திடீரென ராஜசேகர் இறந்துவிட்டதாக தேவாவுக்கு செய்தி வருகிறது.
நண்பனுக்காக விசாகப்பட்டிணம் செல்லும் தேவாவிற்கு, தனது நண்பன் இயற்கையாக சாகவில்லை என்றும், சிலரால் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிய வருகிறது. தனது நண்பனின் சாவுக்கு காரணமானவர்களை தேடி கூலியாக செல்லும் தேவா, இதற்கு பின்னால் ஒரு பெரிய கேங்க்ஸ்டர் நெட்வொர்க்கே செயல்படுவதை அறிந்து கொள்கிறார்.
அந்த கேங்க்ஸ்டர் கும்பலை சாதாரண கூலி என்ன செய்தார்? தனது நண்பன் சாவுக்கு பழி வாங்கினாரா? என்ற கேள்விகளோடு பயணிக்கும் கதையில், எதிர்பார்க்காத பல திருப்பங்களும் காத்திருக்கின்றன.
வழக்கமான ஒரு பழிவாங்கும் கதையை லோகேஷ் கனகராஜ் தனது பரபரப்பான திரைமொழியாலும், ரஜினியின் ஸ்டைலாலும் வித்தியாசமான அனுபவமாக மாற்றி தந்திருக்கிறார். வில்லனாக வரும் நாகர்ஜூனா, அடியாளாகவும், கணிக்க முடியாத கிறுக்கனாகவும் சௌபினின் நடிப்பு பட்டையை கிளப்புகிறது. ஆமிர் கான், உபேந்திரா கதாப்பாத்திரங்களும் அவர்களுக்கான ஸ்பேஸில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
ஸ்ருதி ஹாசனுக்கு படம் முழுவதுமே சோகமான கதாப்பாத்திரம் என்றாலும் தந்தையை இழந்த மகளாக நடிப்பில் சிறப்பான ஒன்றை வெளிப்படுத்தியுள்ளார். இறுதியாக இது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படம் என்பதை நிரூபிக்கும் விதமாக ஆக்ஷனும், ஸ்டைலும் கலந்து கட்டி அடிக்கிறது. ஆங்காங்கே அனிருத் இசையும் இளசுகளை ஆட வைக்கிறது.
படம் தொடங்கி ஆரம்பத்தில் மெதுவாக திரைக்கதை நகர்ந்தாலும், கதாப்பாத்திரங்களை ஆழமாக பதிய செய்த பிறகு அதிரடி ஆக்ஷனுக்குள் நுழைந்து இரண்டாவது பாதியில் ரணகளமாகிறது. ஆனால் ரத்தம் தெறிக்கும் சண்டை காட்சிகள் அதிகமாக உள்ளதால் இது கண்டிப்பாக குழந்தைகளுடன் சென்று பார்க்க ஏற்றதல்ல. மொத்தத்தில் ரசிகர்களுக்கு விருந்து வைத்திருக்கிறது கூலி.
Edit by Prasanth.K