இந்தியாவின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், பள்ளி பாடப்புத்தகங்களில் முகலாய ஆட்சியாளர்களை போற்றி, அவர்கள் ஆட்சியில் இந்தியர்கள் அனுபவித்த துயரங்கள் மறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் குறிப்பிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தனது 'ஹரி ஹர வீர மல்லு' என்ற திரைப்படத்தின் விழாவில் பேசிய அவர், "இந்தியா யாரையும் தாக்கவில்லை, யாரையும் ஒடுக்கவில்லை. ஆனால், எல்லோரும் இந்திய நாட்டை கைப்பற்றவும், நாட்டை தாக்கவும், ஒடுக்கவும் முயற்சி செய்தார்கள்" என்று கூறினார்.
பவன் கல்யாண் மேலும் கூறுகையில், "நம் பள்ளி பாட புத்தகங்களில் முகலாய மன்னர்களின் பெருமைகளைப் பற்றிப் பேசுகிறோம். ஆனால், உண்மையில் நடந்தது என்ன? முகலாயர் காலத்தில் இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகள் குறித்து யாரும் பேசுவதில்லை. அக்பர் சிறந்தவர், அவுரங்கசீப் சிறந்தவர் என்று சொன்னார்கள், ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை பற்றி எதுவும் இல்லை. நம் நாட்டுக்காக வீரமாக போரிட்ட மன்னர்களை பற்றிப் பேச வரலாறு தவறிவிட்டது" என்று கடுமையாக விமர்சித்தார்.
தனது திரைப்படத்தின் முக்கிய நோக்கம் வசூல் மட்டுமல்ல, வரலாற்று உண்மையை வெளியே கொண்டு வருவதுதான் என்று பவன் கல்யாண் திட்டவட்டமாக தெரிவித்தார். "இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் குறித்து நாங்கள் விவாதிக்க நிறைய நேரம் எடுத்துக்கொண்டோம். இது எந்த அளவுக்குப் பணம் வசூலிக்கும் என்று தெரியாது. ஆனால், எங்களால் முடிந்தவரை வரலாற்றை சரியாக சொல்ல முயற்சி செய்துள்ளோம்" என்று அவர் கூறினார்.