வெள்ளி, 29 அக்டோபர் 2010 (17:09 IST)
திருமணம் என்ற பந்தத்திற்குள் எத்தனையோ விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. திருமணம் என்பது ஒரு ஆணையும், பெண்ணையும் மட்டும் இல்லறத்திற்குள் இணைப்பது அல்ல. அவர்கள் மூலமாக அவர்களது குடும்பங்களும் உறவுகளாக மாறுவதற்கான ஒரு அடிப்படை பாலமாகும்.
திருமணம் செய்து கொண்டு கணவன் - மனைவி, குழந்தைகள் என வாழும் வாழ்க்கையே இந்தியாவில்தான் அதிகம். பல உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து பிரம்மிக்கும் ஒரு விஷயம் என்றால் அது ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தைத்தான்.
பல வெளிநாட்டு மக்கள் இந்தியாவைப் போல ஒருவனுக்கு ஒருத்தி என காலம் முழுக்க வாழ வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் நாமோ, நமது கலாச்சாரத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாமல், வெளிநாட்டு மக்களைப் போல திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழும் முறையை தத்தெடுத்துக் கொள்ள நினைக்கிறோம்.எந்த நல்ல விஷயத்தையும் நாம் மற்றவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். ஆனால் இந்தியர்கள் ஏனோத் தெரியவில்லை, உலக நாட்டு மக்களிடம் இருந்து தவறான விஷயங்களை மட்டுமே கற்றுக் கொள்கிறார்கள். இந்தியாவில் பல நல்ல விஷயங்கள் இருப்பதாலோ என்னவோ, மற்றவர்களிடம் இருக்கும் தீயவை மட்டுமே இவர்களது கண்ணுக்குப் படுகிறது.
திருமணம் இன்றி கணவன் மனைவி `போல' வாழ்வது அவர்களுக்கு வேண்டுமானால் எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்களது குடும்பத்திற்கும், அவர்களுக்குப் பிறகு வரும் சமுதாயத்திற்கும் இது ஒரு பெரிய கேள்விக்குறியாகிவிடும் என்பதை நினைவு கூற வேண்டும்.
ஒருத்தனுக்கு ஒருத்தியாக வாழும் நமது தாம்பத்திய உறவுகளில் எத்தனையோ விட்டுக் கொடுத்தல்களும், புரிந்துணர்வுகளும், எழுதப்படாத ஒப்பந்தங்களும், சகிப்புத் தன்மையும் வேரூன்றி உள்ளது. இதனால்தான் எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் கணவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்று நம் நாட்டுப் பெண்கள் நினைக்கின்றனர்.கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கு ஒரு சுமூகமான முடிவினைத் தரலாம் என்றுதான் நமது திருமண பந்தங்கள் நினைக்கின்றன. ஆனால், இதுபோன்று திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் `தம்பதிகள்' அவர்களுக்குள்ளாகவே ஒரு பிடிப்பு இன்மையையே அவர்களது நிலைப்பாடு உணர்த்துகிறது.
நமக்குள் எந்த ஒரு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் பிரச்சினையே இல்லை, சுமூகமாக பிரிந்து சென்றுவிடலாம் என்ற அடிப்படையில்தானே அவர்கள் ஒன்றாக இணைகிறார்கள். எனவே, அவர்களுக்குள் எந்த விதமான பிணைப்பும் இல்லை. விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயமில்லை, ஒன்றாக வாழ்ந்து ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை. இப்படி எதுவுமே இல்லாமல், வேண்டும் என்றால் வாழ்ந்து கொள்ளலாம் என்ற அடிப்படையில் வாழும் வாழ்க்கையில் அவர்கள் எதைக் காண முடியும்.
இந்த சமுதாயம் அங்கீகரிக்கிறதா என்பது அடுத்த விஷயம். முதலில் இந்த முறையை அவர்களது பெற்றோர் அனுமதிப்பார்களா? அல்லது அவர்களது பெற்றோர் இப்படி இருந்திருந்தால் இவர்கள் எங்கிருந்திருப்பார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். நமக்கு மட்டும் சரியாகப் படுவது பலருக்கும் தவறாகப் படலாம். ஆனால், சமுதாயத்திற்கே தவறான ஒரு விஷயத்தை நாம் மட்டும் சரி என்று செய்வது சரியா?
ஒருவருடன் வாழ்ந்துவிட்டு பிறகு எந்தச் சுவடும் இல்லாமல் நீங்கள் பிரிந்து செல்லலாம். ஆனால் அதன் பிறகு வரும் காலத்தில் உங்களின் நிலைப்பாடு என்னவாக இருக்கும். காதல்? திருமணம்? தனிமை? வேலை? இதில் எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக் கொண்டு சமுதாயத்தில் புரட்சியாளர் என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அல்லவா? சமீபத்தில் ஒன்றாக வாழ்ந்துவிட்டு பிரிந்தவர்களில், பெண் ஜீவனாம்சம் கேட்டு தொடர்ந்த வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஒன்றாக வாழ்ந்துள்ளோம் என்று கூறி ஜீவனாம்சம் கோரினால், இதுபோன்று பல வழக்குகள் நீதிமன்றத்தின் முன் வந்து நிற்கும் என்று கூறியுள்ளனர். மேலும், ஒன்றாக வாழ்ந்தால் மட்டும் போதாது, ஒரு சில நிபந்தனைகளின் படி அவர்கள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று நிபந்தனையும் விதித்துள்ளனர் நீதிபதிகள்.இவ்வாறு, சட்டமே அங்கீகரிக்காத ஒரு வாழ்க்கை முறையை நமது இளைய சமுதாயம் வரவேற்றுக் கொண்டிருப்பது கவலையளிக்கக் கூடிய விஷயமாகிறது.
குடும்பம் என்ற வட்டத்திற்குள் சிக்கிக் கொள்ள அச்சப்படும் சிலர்தான் இதுபோன்ற முறைகளை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் திருமணம் அளிக்கும் சமுதாயப் பாதுகாப்பை இவர்கள் இழக்கிறார்கள் என்பதை இவர்களுக்கு நினைவூட்ட வேண்டியது இந்த சமுதாயத்தின் கடமையாகும். இந்திய கலாச்சாரத்தைக் காப்போம்.. பாரதத்தின் பெருமையைப் போற்றுவோம்.