ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுங்கள்
வியாழன், 26 நவம்பர் 2009 (11:54 IST)
உங்கள் வாழ்க்கைத் துணையுடன் எத்தனை முறை சண்டை போட்டு இருப்பீர்கள். எத்தனை முறை கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் இருந்திருப்பீர்கள். ஆனால் ஒரு முறையாவது இதற்கு நேரெதிரான ஒரு விஷயத்தை நீங்கள் செய்திருப்பீர்களா?
ஆம்.. அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருப்பீர்களா? சிலர் செய்திருக்கலாம். ஆனால் சிலர் எல்லாம் பொதுவாக மாட்டார்கள். எனவே விஷயத்திற்கு வருவோம்.
நமது துணைக்கு, இது கணவன், மனைவி இருவருக்குமே பொருந்தும் திடீரென ஒரு நாள் மாலையில் தொலைபேசியில் அழையுங்கள். அவர் வீட்டில் இருந்தாலும் சரி, அலுவலகத்தில் இருந்தாலும் சரி... உடனே கிளம்பி ஒரு இடத்திற்கு வரச் சொல்லுங்கள்.
அவர் வந்ததும், அங்கிருக்கும் ஓட்டலில் முன்பதிவு செய்யப்பட்ட டேபிளுக்கு அவரை அழைத்துச் சென்று அவர் விரும்பிய உணவுகளை வாங்கிக் கொடுக்கலாம்.
இதையே கொஞ்சம் மாறுதலாக ஒரு திரையரங்குக்கு அழைத்துச் செல்லலாம் அல்லது அவர் மிகவும் விரும்பும் கோயிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு தரிசனத்தில் இறைவனை தரிசிக்க வைக்கலாம்.
இதெல்லாம் எதற்கு என்று நிச்சயமாக கேட்பார்கள்.. அதற்கு நீங்கள் சொல்ல வேண்டியது.. உனக்காகத்தான்... என் அன்பை வெளிப்படுத்தத்தான்.. என்று.
இப்படி 2 மாதத்திற்கு ஒரு முறை செய்தாலே போதும்... உங்கள் வாழ்க்கை இனிக்கும் பாலாப்பழமாக மாறும். மேலும் இது தொடரும் போது தேனில் ஊறுவதாக அமையும்.
இப்படி செய்வதற்கு சில விஷயங்களை முதலில் யோசிக்க வேண்டும். திருமணமான புதிதில் என்றால் இது சாத்தியப்படும். ஆனால், குழந்தை இருக்கும் வீடுகளில் இது கொஞ்சம் சிக்கலான காரியம்தான். ஆனால் மனம் இருந்தால் மார்கம் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எப்போதும் உங்கள் அலுவலக மதிய உணவுப் பையில் நாற்றம் பிடித்த டிபன் பாக்ஸ் மட்டும்தானே இருக்கும். வாரத்தில் ஓரிரு நாட்கள் அவர்களுக்குப் பிடித்த பூக்களை வாங்கிச் செல்லலாமே. இதெல்லாம் முந்தைய காலத்தில் நமது அப்பாக்கள் கடைபிடித்த விஷயம்தான். ஆனால் இப்போதெல்லாம் இதை யாரும் செய்வதில்லை என்பதுதான் உண்மை.
நமது அப்பாக்களுக்குத் தெரிந்த ரொமான்டிக் விஷயம் எப்படி நமக்குத் தெரியாமல் போச்சு என்று மல்லிகைப் பூவை வாங்கிச் சென்ற நாள் முதல் நீங்களே கேட்பீர்கள்?