சென்னை அசோக் நகரைச் சேர்ந்த பாத்திமா என்பவருக்கும், திண்டுக்கல்லில் தனது தோழி வீட்டிற்கு அருகே வசித்து வரும் செந்தில்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது.
இவர்களது காதல் விவகாரம் குடும்பத்திற்கு தெரிய வந்ததம் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனால் தங்கள் காதலை பெற்றோர்கள் பிரித்து விடுவார்கள் என்று அஞ்சிய காதலர்கள் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறினர்.
திண்டுக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த காதல் ஜோடியினர் தங்களுக்கு பாதுகாப்புத் தரும்படி கூறினர்.
இதையடுத்து காவல்துறை துணை ஆய்வாளர் கீதாதேவி இருவரது பெற்றோர்களையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். காவல்துறையின் அறிவுரையை ஏற்று பாத்திமா - செந்தில்குமாரின் பெற்றோர்கள் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டனர். ஆனால் திருமணத்தை எந்த மதப்படி செய்வது என்பதில் பிரச்சினை ஏற்பட்டது.
பாத்திமாவும், அவரது பெற்றோர்களும் இஸ்லாமிய முறைப்படிதான் திருமணம் நடக்க வேண்டும் என்றும், செந்தில்குமாரும் அவரது பெற்றோரும் இந்து முறைப்படிதான் திருமணம் நடக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினர்.
மனதால் இணைந்த காதல் ஜோடிக்கு மதத்தால் இணைவதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அவர்கள் ஒருவருக்கொருவர் வற்புறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் தங்களது மதத்திற்காக தங்களது காதலை தியாகம் செய்ய காதலர்கள் முடிவெடுத்தனர். பாத்திமாவும், செந்தில்குமாரும் தங்கள் காதலை மறந்து பிரிந்து சென்றனர்.