வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ அதிமுகவோ..? மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை..! தேமுதிக

Senthil Velan

வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (12:34 IST)
வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ, அதிமுகவோ யாருடனாவது கூட்டணி வைப்போம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது.
 
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தமிழகத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. திமுக அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 
 
இந்த தேர்தலில் தனித்தனியே களம் காணும், அதிமுகவும்,  பாஜகவும், பாமக, தேமுதிக உள்ளிட்ட மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
தேமுதிக எந்த பக்கம் செல்லும் என்பது இதுவரைக்கும் புரியாத புதிராக உள்ளது. மக்களவைத் தொகுதிகளுடன், ராஜ்யசபா சீட் ஒன்று வழங்க வேண்டும் என்று தேமுதிக நிபந்தனை விதித்துள்ளது. அதற்கு பாஜகவும், அதிமுகவும் இதுவரைக்கும் செவி சாய்க்கவில்லை என சொல்லப்படுகிறது.
 
அதிமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக வெளியான தகவலுக்கு தேமுதிக தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக துணை செயலாளர் பார்த்தசாரதி, அதிமுக, பாஜக உள்ளிட்ட எந்த கட்சியுடன், கூட்டணி தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
 
திமுகவுடன் கூட்டணி வைக்க மாவட்ட செயலாளர்கள் ஏற்கனவே வலியுறுத்தியதாகவும், வாய்ப்பு கிடைத்தால் திமுகவோ, அதிமுகவோ யாருடனாவது கூட்டணி வைப்போம் எனவும் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். 

ALSO READ: வாக்காளர் பட்டியல் முரண்பாடுகளை களைய வேண்டும்..! தேர்தல் ஆணையத்திடம் அதிமுக முறையீடு.!!
 
இதன் மூலம் பாஜக கூட்டணிக்கு செல்ல தேமுதிக தயாராக இல்லை என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.  தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்