மக்களவைத் தேர்தலையொட்டி மாவட்டச் செயலாளருடன் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் திருமதி.பிரேமலதா ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் கூட்டணி தொடர்பாக இதுவரை யாரிடமும் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என தெரிவித்தார்.
14 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாக தெரிவித்த பிரேமலதா, 2014 மக்களவைத் தேர்தல் போல் தேமுதிகவுக்கு 14 தொகுதிகள் பங்கீடு செய்யும் கட்சியுடன் கூட்டணி என்றும் திட்டவட்டமாக கூறினார்.
பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் தேமுதிகவின் கூட்டணியின் நிலைப்பாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் குறித்து விரைவில் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நான்கு மண்டலங்களில் தேமுதிக சார்பில் மாபெரும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்த பிரேமலதா, தமிழகம் முழுவதும் நாளை முதல் தேர்தல் பணியை இருப்பதாக கூறினார். புதிதாக கட்சி தொடங்கிய நடிகர் விஜய்க்கு பிரேமலதா வாழ்த்து கூறினார்.
14 மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் என்ற அதிரடி நிபந்தனையை தேமுதிக விதித்துள்ளது. இதனால் கூட்டணி பேச்சு வார்த்தையில் இழுபறி நீடிக்க வாய்ப்புள்ளது. தேமுதிகவின் நிலைப்பாட்டால் அதிமுகவும், பாஜகவும் அடுத்து என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.