இந்திய முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடக்க இருக்கிறது. முதல்கட்டமாக இன்று ஆந்திரா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட 91 மக்களவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அதையடுத்து இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது. வாக்குப்பதிவுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ‘ தமிழகத்தில் நடைபெற இருக்கும் 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தலுக்கும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து முடிந்துள்ளன. தேர்தலுக்குத் தேவையான 1,50,302 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 89,160 கட்டுப்பாட்டு இயந்திரங்களும் , 94,653 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்களும் தயார் நிலையில் உள்ளன’ என்று தெரிவித்துள்ளார்.