கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பல நூற்றுக்கணக்கான மனநலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் பலர் குணமடைந்தாலும் உறவினர்களால் கைவிடப்பட்ட காரணத்தால் மருத்துவமனையிலேயே தங்கி அங்கேயே சில வேலைகளை செய்து வாழ்ந்து வருகின்றனர். கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இதுபோல 114 ஆண்களளும், 78 பெண்களுமாக மொத்தம் 192 பேர் வேலை செய்து வருகின்றனர்.
இந்த 192 பேருக்கும் இதுவரையில் வாக்களிக்கும் வசதிகள் இல்லாமல் இருந்தது. அதைப்போக்கும் விதமாக மருத்துவமனையின் இயக்குனர் பூர்ன சந்திரிகா தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு இவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துள்ளார். அது மட்டுமல்லாமல் வாக்களிக்க வசதியாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலேயே வாக்குப்பதிவு மையம் அமைக்கவும் ஏற்பாடு செய்துள்ளார். இதையொட்டி மருத்துவமனைக்கு சென்ற தேர்தல் அதிகாரிகள் வாக்காளர்களுக்கு மின்னனு வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிப்பது என்ற வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்துள்ளனர்.