அத்வானி இல்லாமல் தேர்தல் அறிக்கை – அதிருப்தியில் பாஜகவினர் !

செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (13:40 IST)
நேற்று நடந்த பாஜக தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் அத்வானி கலந்து கொள்ளாதது பாஜக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் மோடியை ஒரு மிகப்பெரிய தலைவராக மாற்றியதில் அத்வானிக்கு மிகப்பெரிய பங்குண்டு. அதேப்போல மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கும் அத்வானி மிகப்பெரிய அளவில் அழுத்தம் கொடுத்தார். குஜராத் கலவரத்தின் போது மோடி மீது பாஜ தலைமைக் கோபத்தில் இருந்த போது அத்வானிதான் அவரைக் காப்பாற்றினார். ஆனால் மோடி பிரதமரான பின்பு அத்வானியை கட்சியில் இருந்து ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் கட்சியில் அத்வானியின் முக்கியத்துவம் குறைய ஆரம்பித்தது.

நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலிலும் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. பல முறை அவர் நின்று வெற்றிபெற்ற குஜராத் காந்திநகர் தொகுதி இம்முறை அமித் ஷா வுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணமாக 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படாது என பாஜக முடிவெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில்  பாஜகவின் 35 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக எதுவும் எழுதாமல் இருந்த அத்வானி நேற்று முதல்முறையாக தனது இணையதளத்தில் மீண்டும் எழுதியுள்ளார். அதில் ’ அரசியல் ரீதியாக தன்னுடன் ஒத்து போகாமல் முரண்படுபவர்களை பாஜ ஒருபோதும் தனது எதிரிகளாக கருதியது கிடையாது. அவர்களின் எதிர்ப்பாளர்களாக மட்டுமே கருதியது. அவர்களை தேச விரோதிகளாக கருதியதும் கிடையாது. தனிமனித சுதந்திரத்தில் தலையிடாமல் இருப்பதை பாஜக என்றும் உறுதி செய்துள்ளது. கடந்த காலத்தை மறுந்து விடக்கூடாது. எதிர்காலத்தையும் கட்சி கூர்ந்து பார்க்க வேண்டும். ஜனநாயகத்தை சீர்குலைத்து விடக் கூடாது.’ என தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

நேற்று பாஜகவின் மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் அதில் பாஜகவின் மூத்த நிர்வாகிகளான அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி போன்றவர்கள் கலந்து கொள்ளவில்லை. சென்ற தேர்தலின் போது பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிற்கு இவர்கள் இரண்டு பேரும்தான் தலைமை தாங்கினார்கள்.

இந்நிலையில் பாஜக ஆரம்பித்ததில் இருந்து அத்வானி இல்லாமல் நடைபெற்ற முதல் முக்கிய நிகழ்வு இதுதான் என பாஜகவினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்