ஆன்லைன் மூலம் பொருட்கள் விற்பதில் முன்னனி வகிக்கும் நிறுவனங்கள் அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட். நேரடி அன்னிய முதலீட்டின் மூலம் இந்தியாவில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனங்கள் விழாக்காலங்களில் 4 நாட்கள் விழாக்கால விற்பனையை நடத்துவது வழக்கம். கடந்த செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரை நடத்திய விற்பனையில் இந்த இரண்டு நிறுவனங்களும் சுமார் 19,000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளன.
பெரும்பாலும் மொபைல் போன்கள், எலக்ட்ரானிக் பொருட்கள், அழகு பொருட்கள் அதில் அதிகம் விற்பனையாகி உள்ளது. அமேசான் போன்ற அன்னிய முதலீடு நிறுவனங்களுக்கு விற்பனை இலக்கு இருப்பதாகவும் அதை மீறி பல கோடி ரூபாய்க்கு அவர்கள் விற்பனை செய்து வருவதாகவும் வணிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
புதிதாக வெளியிடப்படும் மொபைல் போன்களை ஆன்லைனிலேயே சலுகை விலைக்கும், வட்டியில்லா தவணை முறையிலும் விற்று விடுவதால் நகரங்களில் செல்போன் விற்பனை கடைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து சரியான முடிவுகளை மேற்கொள்ளுமாறு வர்த்தகர்கள் சங்கம் அமேசான் மூலம் பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் பெரிய நிறுவனங்களுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.