முஸ்லிம் மக்களால் புனித மாதமான ரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் மிக உன்னதமான வழிபாடுகளில் ஒன்றுதான் இஃதிகாப் ஆகும்.
இஃதிகாப் என்றால்... இறை உணர்வு ஒன்றை மட்டுமே எண்ணியவாறு இறை இல்லத்தில் சிறிது காலம் தங்கியிருந்து நோன்பை கடைபிடிப்பதுதான்.
அச்சமயத்தில் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகள் சில உள்ளன.
அதாவது, பாலுறவு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. அந்த எண்ணமேக் கூடாது.
மிக அத்தியாவசியத் தேவை இருந்தால் ஒழிய வேறு எந்த காரணத்திற்காகவும் தங்கியிருக்கும் இறையில்லத்தை விட்டு வெளியே செல்லவேக் கூடாது.
இதுபோன்று இஃதிகாப் இருப்பதால் மனிதன் அடையும் பலன்களுக்கு அளவே இல்லை.
webdunia photo
WD
இன்றைய இயந்திர உலகில் இயந்திரத்திற்குப் போட்டியாக இடைவெளியின்றி உழைத்துக் கொண்டிருக்கும் மனிதன், அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகி, உடனிருப்பவர்கள் மீதான அன்பை மறந்து அளவுக்கதிகமான கோபம், எரிச்சல் போன்றவற்றுக்கு ஆளாகின்றனர்.
இந்த சூழ்நிலையில், தனது எந்திர வாழ்க்கையை மறந்து இறை உணர்வோடு, இறை இல்லத்தில் தங்கியிருந்து மன அமைதியுடன் இறைவனை வணங்கி அல்லாவின் அருளாசியைப் பெறுவதால் இந்த இஃதிகாப் வழிபாடு உன்னதமானதாகக் கருதப்படுகிறது.
எல்லா வகையான உலகத் தொடர்புகளையும் விட்டுவிட்டு பள்ளி வாசலிலேயே தங்கி, நோன்பிருந்து, இறைவனை நினைவு கூர்ந்து, வழிபாடுகளில் ஈடுபட்டு, இறை நினைவைத் தவிர வேறு எதற்கும் மனதை ஆட்படுத்தாமல், சில நாட்கள் இஃதிகாப் இருந்து பாருங்கள்.
உங்கள் இதயம் மட்டும் அல்ல... நீங்களே லேசாகி வானத்தில் மிதக்கும் உணர்வைப் பெறுவீர்கள்.
இஃதிகாப் முடித்து வெளியில் வரும் போது புதிய உலகை நீங்கள் காண்பீர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) புனித ரமலான் மாதத்தின் இறுதி பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழித்திருந்து வழிபாடுகளில் ஈடுபடுவார். மிகுந்த ஆர்வத்துடனும், முழு ஈடுபாட்டுடனும் அவற்றை மேற்கொள்வார்.
ரமலானில் இஃதிகாப் இருப்பவர்கள் உண்மையில் நற்பேறு பெறுவார்கள். அந்த பட்டியலில் நாமும் இடம் பெற முயலுவோம் ஆக.
தக்வா (இறையச்சம்) என்றால் அல்லாஹ்விற்கு பயந்து, அவன் ஏவியவைகளைச் செய்யும், தடை செய்தவகளைத் தவிர்த்தும் நடப்பதுதான். ‘’தக்வாவின் உரிய தோற்றத்தை’’ நோன்பு நமக்கு கற்றுக் கொடுக்கின்றது. நோன்பாளி யாருக்கும் தெரியாத இடத்தில் தனிமையில் இருக்கும்போதும் பசியுள்ளவனாக இருந்தும் தன்னிடமுள்ள உணவை உண்பதில்லை.
webdunia photo
WD
தாகமுள்ளவனாக இருந்தும் எதையும் குடிப்பதில்லை. இச்சை இருந்தும் அதை நிறைவேற்றுவதில்லை. இதற்கெல்லாம் காரணம் நான் தனிமையில் இருந்தாலும் இந்த நோன்பை கடைமையாக்கிய அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற எண்ணத்தினால்தான். இதுதான் ‘’இறையச்சத்தின் உண்மையான தோற்றமாகும்‘’.
இத்தன்மை நோன்போடு முடிந்துவிடக்கூடாது. வாழ்க்கை முழுவதிலும் ஒவ்வொரு வினாடியும் இதே எண்ணத்தோடு ஒவ்வொரு முஸ்லிமும் வாழவேண்டும். இந்த எண்ணத்தோடு வாழ்ந்தால்தான் தொழாதவர் ஏன் தொழவில்லை? இத்தொழுகையைக் கடைமையாக்கிய இறைவன் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்று நினைத்துத் தொழ ஆரம்பித்துவிடுவர். பாவங்களில் ஈடுபடக்கூடியவர், அல்லாஹ் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் அவன் என்னைத் தண்டிப்பான் என்று நினைத்து அதை விட்டுவிடுவார். இதனால்தான் அல்லாஹ் குர்ஆனின் பல இடங்களில் ஈமான் கொண்டவர்களே அல்லாஹூ அவனது தூதர் முஹம்ம (ஸல்) அவர்களும் ஏவியதில் முடியுமானவைகளைச் செய்யும், தடை செய்தவைகளை முற்றிலுமாக தவிர்த்து நடப்பதற்கு உறுதியான முடிவெடுங்கள், அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக...!
webdunia photo
WD
நோன்பில் இந்த உயரிய பண்பு இருப்பதினால்தான் அல்லாஹ் அதனை ஒரு தனிப்பட்ட வணக்கமாகக் கூறுகின்றான். ஹதீல் சூத்ஸியில் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘’நோன்பைத் தவிர ஆதமுடைய மக மகன் செய்யக்கூடிய எல்லா வணக்கங்களும் அவனுக்குரியதே’’ அது (நோன்பு) எனக்குரியது. அதற்கு நானே கூலி கொடுக்கிறேன், (காரணம்) அவன் தன் இச்சையையும், உணவையும், குடிபானத்தையும் அல்லாஹ்வுக்கே உரியன. அவனே எல்லா வணக்கங்களுக்கும் கூலி கொடுக்கின்றான். அப்படி இருந்தும் நோன்பை மட்டும் அல்லாஹ் தனித்துவப்படுத்திச் சொல்வதற்கு காரணம், அது உண்மையான இறையச்சத்தோடும், இக்லாஸ் (மனத் தூய்மை) உடனும் நோற்கப்படுவதினால்தான். எனவே நோன்பு விஷயத்தில் அல்லாஹ்விற்கு நாம் அஞ்சுவது போன்று, மற்ற எல்லா விஷயங்களிலும் எல்லா காலங்களிலும் அல்லாஹ்வை அஞ்சி வாழ்வோமாக...!
யார் நோன்பை இந்த உயரிய நோக்கமின்றி வெறும் சடங்குக்காக நோற்கிறாரோ அதில் எந்தவித பிரயோசனமும் இல்லை. யார் கெட்ட பேச்சுக்களையும் கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடியை விடுவதிலும் அல்லாஹ்விற்கு எந்தத் தேவையும் இல்லை என்பதாக நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.