கடவு‌ச்‌சீ‌ட்டு இருந்தால்தான் ஹஜ் பயணிகளுக்கு விசா

சனி, 31 ஜனவரி 2009 (12:02 IST)
கடவு‌ச்‌சீ‌ட்டு (பாஸ்போர்ட்) வைத்திரு‌ப்பவ‌ர்களு‌க்கு ம‌ட்டுமே இ‌னி ஹ‌ஜ் வருபவ‌ர்களு‌க்கான ‌விசா வழங்கும் புதிய நடைமுறை இந்த ஆண்டிலிருந்து அமல்படுத்தப்படுகிறது.

ஹஜ் ஆணைய‌த்‌தி‌ன் அனுமதி சீட்டு ம‌ட்டுமே பெற்று மெக்கா செல்வோர் சவுதி அரேபியாவில் நிரந்தரமாக தங்கிவிடுவதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முஸ்லீம்கள் ஆண்டுதோறும் சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா நகருக்கு ஹஜ் பயணம் மேற்கொள்வது வழக்கம். தற்போது ஹஜ் ஆணைய‌ம் வழங்கும் அனுமதி சீட்டு (பாஸ்) அடிப்படையில் சவுதி அரேபியா அரசு விசா வழங்கி வ‌ந்தது.

இந்த நிலையில், ஹஜ் பயணம் செய்யும் முஸ்லீம்களில் சுமார் 40 சதவீதம் பேர் தொடர்ந்து அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவது சவுதி அரசுக்கு தெரிய வந்தது. ஜனவ‌ரி 15-ந் தேதி நிலவரப்படி, இந்தியாவில் இருந்து ஒரு லட்சத்து 22 ஆயிரம் பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். இவர்களில் 66 ஆயிரம் பேர் மட்டுமே அங்கிருந்து இந்தியா திரும்பினார்கள். எஞ்சியவர்கள் தொடர்ந்து அங்கேய தங்கிவிட்டனர்.

இந்தியவர்கள் ஹஜ் பயணிகள் என்ற போர்வையில் சவுதி அரேபியாவில் தங்கி விடுவதாக அந்த நாட்டு உளவுத்துறையும் அரசுக்கு எச்சரிக்கை செய்தது. வெளிநாட்டவர்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டில் நிரந்தரமாக தங்கிவிடுவது சவுதி அரேபியா அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஹஜ் பயணிகளுக்கு விசா கொடுப்பதில் சவுதி அரேபியா அரசு பு‌திய விதிமுறையை கொண்டுவந்துள்ளது.

இதன்படி, இனிமேல் ஹஜ் கமிட்டி வழங்கும் அனுமதி சீட்டின் பேரில் விசா வழங்கப்படாது. பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஹஜ் பயணிகளுக்கு மட்டுமே விசா வழங்கப்படும்.

இந்த புதிய நடைமுறை நடப்பு ஆண்டிலிருந்து கடைப்பிடிக்கப்படும் என்று சவுதி அரேபியா அரசு இந்திய வெளியுறவு அமைச்சகத்திடம் உறுதிபட தெரிவித்துவிட்டது. இதற்கிடையே, இந்த புதிய விதிமுறையை நீக்கக்கோரி அந்த நாட்டிடம் முறையிடுவதற்காக வெளியுறவுத்துறை உயர் அதிகாரி தலைமையில் மத்திய ஹஜ் ஆணைய‌க் குழு ஒன்று பிப்ரவரி மாதம் 8-ந் தேதி சவுதி செல்ல இருக்கிறது.

இதற்கிடையே, பாஸ்போர்ட் வைத்திருப்போருக்கு மட்டுமே விசா வழங்கப்படும் என்ற சவுதி அரேபியாவின் புதிய முடிவு பெரும்பாலான முஸ்லீம்களுக்கு குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் முஸ்லீம்களுக்கு பெரும் பாதிப்பாக இருக்கும் மத்திய ஹஜ் ஆணைய‌த்‌தி‌ன் தலைமைச் செயல் அதிகாரி முகமது ஓயாஸ் கூறியிருக்கிறார். பாஸ்போர்ட் வாங்குவது உடனடியாக இயலாத காரியம். எனவே, குறைந்தபட்சம் கால அவகாசம் கொடுத்த பின்பு இந்த விதிமுறையை கடைப்பிடிக்கலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்