மருத்துவக் குணங்கள் நிறைந்த ஓமத்தின் பயன்களை தெரிந்து கொள்வோம்...

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். அதற்கு ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும்.

 
வயிறுப் பொருமல் நீங்க
 
சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.
 
புகைச்சல் இருமல் நீங்க
 
சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும்.
 
மந்தம்
 
பொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.
 
பசியைத் தூண்ட
 
நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும். பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது.
 
இடுப்பு வலி நீங்க
 
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் இடுப்பில் நன்றாகத் தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்