உடலின் ஒட்டுமொத்த நலனுக்கும், அனைத்து உறுப்புகளின் சீரான செயல்பாட்டிற்கும் சிறுநீரகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சரியான உணவுப் பழக்கவழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும் அத்தியாவசிய உணவுகளின் பட்டியல் இதோ:
1. காலிஃப்ளவர்: சிறுநீரகங்களுக்கு மிகவும் உகந்த உணவுகளில் காலிஃப்ளவர் முக்கியமானது. இதில் பொட்டாசியம் குறைவாக இருப்பதோடு, வைட்டமின்கள் சி, கே மற்றும் சக்திவாய்ந்த ஆன்டி ஆக்சிடென்டுகள் நிறைந்துள்ளன. மேலும், ஃபோலேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. காலிஃப்ளவரைத் தவறாமல் உணவில் சேர்ப்பது, சிறுநீரகங்களின் பணிச்சுமையைக் குறைத்து, நச்சுக்களால் ஏற்படும் சேதத்தில் இருந்து அவற்றைப் பாதுகாக்கும்.
2. ப்ளூபெர்ரி: அளவில் சிறியதான ப்ளூபெர்ரி பழங்கள், சிறுநீரகங்களுக்கு மிகவும் ஆரோக்கியமானவை. அவற்றில் சோடியம், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் குறைவாக உள்ளன. இவை சிறுநீரகங்களைப் பாதுகாக்க மிகவும் ஏற்றவை. ப்ளூபெர்ரியைத் தொடர்ந்து சாப்பிடுவது இதய நோய் மற்றும் நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க உதவும். இந்த இரண்டு நோய்களும் சிறுநீரகங்களுக்குப் பெரும் தீங்கு விளைவிக்கக்கூடியவை.
3. சிவப்பு குடைமிளகாய்: சிவப்பு நிற குடைமிளகாய், சிறுநீரக ஆரோக்கியத்திற்குப் பெரும் பலம் சேர்க்கும். இதில் பொட்டாசியம் குறைவாக இருப்பதோடு, வைட்டமின்கள் ஏ, சி, பி6, போலிக் அமிலம் மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கியமான ஊட்டச்சத்துகள் நிரம்பியுள்ளன. இந்த வைட்டமின்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, சிறுநீரகப் பாதுகாப்பிற்கும் உதவுகின்றன.
4. பூண்டு:
பூண்டு உணவுக்குச் சுவையை அதிகரிப்பதுடன், சிறுநீரக ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறந்தது. இதில் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தால் (Oxidative Stress) ஏற்படும் சிறுநீரக சேதத்தைக் குறைக்க உதவும் ஆன்டி ஆக்சிடென்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு (Anti-inflammatory) சேர்மங்கள் உள்ளன. எனவே, சமையலில் பூண்டு சேர்த்துக்கொள்வது சிறுநீரகங்களுக்குப் பாதுகாப்பானது.
5. முட்டையின் வெள்ளைக் கரு: உடலுக்குப் புரதம் மற்றும் பாஸ்பரஸ் அத்தியாவசியமானவை. அதேவேளையில், அதிகப்படியான பாஸ்பரஸ் சிறுநீரகங்களுக்குச் சிரமத்தை உண்டாக்கும். முட்டையின் வெள்ளைக் கருவில் பாஸ்பரஸ் குறைவாகவும், புரதம் போதுமான அளவிலும் உள்ளது. முட்டையின் வெள்ளைக் கருவைத் தொடர்ந்து சாப்பிடுவது, சிறுநீரகங்களுக்கு அதிக சுமை கொடுக்காமல், அவை சீராகச் செயல்பட வழிவகை செய்யும். உணவில் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்ப்பது, சிறுநீரகங்களின் அழுத்தத்தைக் குறைப்பதோடு, புரத உட்கொள்ளலைச் சமநிலைப்படுத்தவும் உதவும். முட்டை சாப்பிட விருப்பமில்லை என்றால், பாலாடைக்கட்டி (Cottage Cheese) அல்லது டோபு (Tofu) வடிவில் புரதத்தைச் சேர்த்துக்கொள்ளலாம்.