நாம் உணவு உட்கொள்ளும்போது, உணவுடன் சேர்த்து காற்றையும் விழுங்கிவிடுகிறோம். இந்த காற்றானது வயிற்றையும் தொண்டையையும் இணைக்கும் உணவுக்குழாய் பகுதியில் அதிகமாக சேரும். குறிப்பாக, நீங்கள் வேகமாக சாப்பிடும்போதும், தண்ணீர் குடிக்கும்போதும், இந்த காற்று ஏப்பமாக வெளியேறுகிறது. இது ஒரு இயல்பான நிகழ்வு.
மது அருந்தும்போதும், புகை பிடிக்கும்போதும் அதிகப்படியான வாயு உள்ளிழுக்கப்பட்டு ஏப்பத்தை ஏற்படுத்துகிறது. சோடா போன்ற கார்பனேற்றப்பட்ட பானங்களை அருந்தும்போது, வாயு அதிகமாக உள்ளிழுக்கப்பட்டு ஏப்பம் வரக்கூடும்.
ஏப்பம் வருவதைத் தடுக்க, உங்கள் அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே போதும். உணவை வேகமாக சாப்பிடாமல், மெதுவாக மென்று விழுங்குங்கள். இரவில் தாமதமாகச்சாப்பிட நேர்ந்தால், மசாலா அதிகம் உள்ள உணவுகளை தவிர்த்துவிடுங்கள். செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள், லாக்டோஸ் இல்லாத பால் பொருட்களை முயற்சி செய்யலாம்.