தெலுங்கானா மாநிலத்தின் வாராங்கல் நகரில் அமைந்துள்ள பத்மாட்சி மலைக்கோவில், பக்தர்களிடையே பெரும் மகிமை வாய்ந்த ஆலயமாக திகழ்கிறது. அனைத்து மதத்தினரும் வழிபடும் இந்த திருத்தலம், சிறப்பான கட்டடக்கலையால் மட்டுமின்றி, அதன் ஆழமான வரலாற்றாலும் தனித்துவம் பெறுகிறது.
கி.பி. 12ஆம் நூற்றாண்டில், காக்கத்திய மன்னர்கள் ஆட்சியில், சமண சமய கோவிலாக பத்மாட்சி திருக்கோவில் உருவாக்கப்பட்டது. அப்போது, இந்த பகுதியை பாசாதி என்று அழைத்தனர், ஏனெனில் பெரும்பாலான மக்கள் சமண சமயத்தினர் தான். அவர்கள் இந்த கோவிலை பத்மாட்சி குட்டா என்றும், அம்மா என்றும் அன்புடன் அழைத்தனர்.
சுமார் 1,000 அடி உயரத்தில், ஹனமகொண்டா மலை மீது இந்த கோவில் அழகாக எழுந்து நிற்கிறது. மலையின் அடிவாரத்தில் திருக்குளம் காணப்படுவதுடன், மலையேற எளிதாக படிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சமண தெய்வங்களுடன், இந்த ஆலயத்தில் சிவபெருமானின் கோயிலும் காணப்படுகிறது. குகையின் ஒரு பகுதியில் சிவலிங்கம் மற்றும் நந்தியின் சிலைவடிவங்கள் உள்ளது. மலையின் அடிவாரத்தில் லட்சுமி நரசிம்மர் மற்றும் சித்தேஸ்வரர் கோவில்களும் பக்தர்களின் தரிசனத்திற்காக உள்ளது.