கோனியம்மன் கோவில் தேர் திருவிழா..! பக்தர்கள் வெள்ளத்தில் மூழ்கிய கோவை.!!

Senthil Velan

புதன், 28 பிப்ரவரி 2024 (17:31 IST)
கோவையில் நடைபெற்ற கோனியம்மன் கோவில் தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து அனைவரையும் வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவையின் காவல் தெய்வம் என கோவை மக்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் பகுதியில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபட்டுவிட்டு செல்கின்றனர்.
 
ஆண்டு தோறும் வெகு விமர்சியாக நடைபெறும் கோனியம்மன் கோவில் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் புலி வாகனம், கிளி வாகனம், சிம்ம வாகனம், அன்னவாகனம் என ஒவ்வொரு வாகனத்தில் பவனி வந்து அனைத்து பக்தர்களுக்கும் காட்சியளித்து அருள் பாலித்தார்.
 
விழாவின் முக்கிய நிகழ்வான கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. பக்தர்கள் வெள்ளத்தில் அம்மன் எழுந்தருளிய தேர், ராஜவீதியில் இருந்து புறப்பட்டு ஒப்பணக்கார வீதி, கருப்பகவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை வந்தடைந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து, தேர் மீது உப்பு வீசி வழிபட்டனர்.

ALSO READ: நெய்தீபம் ஏற்றிய போது சேலையில் தீ..! கோவிலில் நடந்த விபரீதம்..!!
 
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு, ஒப்பணக்கார வீதி அத்தர் ஜாமத் பள்ளி வாசல் இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து அனைவரையும் வரவேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்