திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், கந்தசஷ்டி திருவிழா எப்போது?

Mahendran

புதன், 16 அக்டோபர் 2024 (18:28 IST)
திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், நவம்பர் 2ஆம் தேதி கந்தசஷ்டி திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்வுடன் ஆரம்பமாக உள்ளது. இதையொட்டி, பக்தர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியாவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
 
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் முதன்மை கோயில் ஆகும். வருடம் தோறும் ஐப்பசி மாதத்தில், கந்தசஷ்டி விழா 7 நாட்கள் கொண்டாடுவது வழக்கம். இம்முறை, நவம்பர் 2 அன்று, அதிகாலை அனுக்கை பூஜையுடன் விழா ஆரம்பமாகும். தொடர்ந்து, யாகசாலை பூஜைகள் நடைபெற்று, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வள்ளி ஆகியோருக்கு உற்சவர் சன்னதியில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதன்பின் விரதம் மேற்கொண்டு கோயிலில் தங்கியிருக்கும் பக்தர்களுக்கும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.
 
இடைவிடாது தினமும் பகல் 11 மணிக்கும் மாலை 6 மணிக்கும் சண்முகபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. சண்முகப்பெருமான் வெள்ளை, பச்சை மற்றும் மயில் அலங்காரங்களில் காட்சியளிக்கிறார். மாலை நேரங்களில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானையுடன் கோயில் வளாகத்தில் பல்வேறு சிறப்பு அலங்காரங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
 
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று, நவம்பர் 6 அன்று வேல் வாங்குதல் நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பின், நவம்பர் 7 அன்று சொக்கநாதர் கோவில் வாசலில் சூரசம்ஹாரம் நடைபெறும். 8ஆம் தேதி காலை தேரோட்டமும், மாலையில் பாவாடை தரிசனம் மற்றும் மூலவர் தங்க கவச அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
 
விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் சத்யபிரியா மற்றும் குழு உறுப்பினர்கள், துணை ஆணையர் சூரியநாராயணன் உள்ளிட்ட கோவில் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்