காமாட்சி விளக்கின் முக்கியத்துவம்

ஞாயிறு, 29 ஆகஸ்ட் 2021 (00:30 IST)
காமாட்சி அம்மன் தன்னுடைய பிள்ளைகளின் நலனுக்காக தவம் இருந்தவர். உலக மக்களின் நன்மைக்காக, அவர் அப்படி தவம் இருந்த போது,சகல  தெய்வங்களும் காமாட்சி அம்மனுக்குள் அடங்கியது. அதனால் காமாட்சி அம்மனை வழிபட்டாலே, அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் ஒருவருக்கு  கிடைத்துவிடும் என்பது நம்பிக்கை.
 
தங்களுடைய குலதெய்வங்களை நினைத்துக் கொண்டு காமாட்சி விளக்கை ஏற்றி வணங்கும் போது,காமாட்சி அம்மனுடைய அருளும், அவரவர் குலதெய்வத்தின் ஆசியும் கிடைக்கும்.தங்களுடைய குலதெய்வம் எது என தெரியாமல் தவிப்பவர்கள், காமாட்சி அம்மனையே தங்கள் குலதெய்வமாக  நினைத்துக் கொண்டு, ‘நீயே என் குல தெய்வமாய் இருந்து என் குலத்தை தழைக்க காப்பாற்று’ என வணங்கியபடி விளக்கேற்றி வழிபடலாம். அதற்கு  ‘காமாட்சி தீபம்’ என்று பெயர்.
 
காமாட்சி அம்மனுக்குள் அனைத்து தெய்வங்களும் அடக்கம் என்பதால், அனைத்து தெய்வங்களின் அருளையும் பெற வேண்டி, திருமணங்களில் மணமக்கள் கையில் காமாட்சி விளக்கை ஏந்திக்கொண்டு வலம் வரவும்,புகுந்த வீட்டிற்குச் செல்லும் மணப்பெண், அங்கு முதன் முதலில் காமாட்சி விளக்கை ஏற்றுவதற்கும் சொல்கிறார்கள்.அதோடு காமாட்சி விளக்கினை ஏற்றுவதால் குலதெய்வத்தின் ஆசியுடன் அவர்களின் குலம் தழைத்து வளரும் என்பதும் நம்பிக்கை.
 
கஜலட்சுமியின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும் காமாட்சி விளக்கு மங்கலப் பொருட்களில் ஒன்று என்பதால், பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம்  ஏற்றி, தினமும் வழிபட்டு வரும் இல்லத்தில் வறுமை என்பதே இருக்காது.சில குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பாதுகாப்பாக வைத்திருப்பதும் உண்டு.திருமண சீர்வரிசைகளில்,மணப்பெண்ணுக்கு காமாட்சி அம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம்  வழங்குவது இன்றும் நடைமுறையில் உள்ளது.
 
நம்முடைய இல்லத்திலும், உள்ளத்திலும் உள்ள எல்லா இருள்களையும் நீக்கி, இறைவனின் அருள் ஒளியை அருளும்,காமாட்சி அம்மன் விளக்கு நமக்கு  அனைத்து செல்வங்களையும் கொடுக்கட்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்